கொழும்பு துறைமுக விவகாரம்: குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரிக்கும் ரணில்

Report Print Rakesh in அரசியல்
161Shares

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்தியாவுக்கோ அல்லது ஜப்பானுக்கோ விற்பது குறித்து நல்லாட்சி அரசில் எந்தவித உடன்படிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று முன்னாள் பிரதமரான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அபிவிருத்தி செய்யும் உடன்படிக்கைகள் மாத்திரமே தமது ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

"கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் அபிவிருத்தி செய்யப்படும் நேரத்தில் இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் நிறுவனங்கள் குறுகிய கால குத்தகைக்கு முனையத்தை இயக்கும்.

மாறாக நிரந்தரமாகக் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவில்லை.

அதேபோல் கடந்த ஆட்சியில் அமைச்சரவையில் இதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டதுடன் 51 வீத உரிமம் இலங்கைக்கு இருக்கும் விதமாகவே குத்தகை தொடர்பான உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்டது.

இந்தியாவின் அதானி நிறுவனம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடும், ஜப்பானின் ‘ஜய்கா’ நிறுவனம் 190 மில்லியன் அமெரிக்க டொலர்களும் முதலீடு செய்தே இந்த அபிவிருத்தியின் முதற்கட்ட வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவிருந்தோம்.

இவ்வாறான நிலைமையில் கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை விற்பதற்கு எமது அரசு இணங்கியதாக முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரிக்கின்றோம்" எனத் தெரிவித்துள்ளார்.