தமிழீழ தாயக அழிப்புக்கு பின்னால் இருக்கும் இதயம் நோகவல்ல தமிழ் அரசியலும் மூளை சிலிர்க்கும் சிங்கள அரசியலும்

Report Print Gokulan Gokulan in அரசியல்
255Shares

தொல்பொருள் சின்னங்களின் பெயரால் குருந்தூரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்கள பௌத்த குடியேற்றமானது கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட தமிழின அழிப்பின் ஓர் அங்கமாகும் என கட்டுரையாசிரியர் தி. திபாகரன் எம்,ஏ தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இதில் விருப்பு,வெறுப்புக்கு இடமின்றி, காய்தல் உவத்தல் இன்றி சிங்களக்குடியேற்றத்தின் வாயிலான தமிழின அழிப்பு பற்றிய சரியான அரசியல் வரலாற்று புரிதலைப் பெற வேண்டியது இக்கால கட்டத்தில் மிகவும் அவசியமானதாகும்.

தமிழ் தலைவர்களை பயன்படுத்தியே சிங்களத் தலைவர்கள் இத்தகைய சிங்களக் குடியேற்றங்களை மிகத் திறமையாகவே செய்து வருகிறார்கள் என்பதை தமிழ்த் தரப்பினர் சரிவரப்புரிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகும்.

இந்து சமுத்திர பிராந்தியத்தில் இலங்கைத்தீவு இந்தியாவின்புவிசார் அரசியல் (Geopolitics) வலயத்தினுள் அமைந்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு வளையத்தில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள ஈழத் தமிழரை அவர்களது வட-கிழக்கு தாயகத்தில் இருந்து இல்லாது அகற்ற வேண்டும்.

தமிழர்களை அகற்றுவதற்காகவே வட-கிழக்கில் சிங்களக் குடயேற்றங்களை மேற்கொண்டது. இதன் மூலம் தமிழர் தாயகத்தின் அரசியல் புவியியலை (Political Geography)மாற்றியமைத்து விட்டது.

அந்தவகையில் தமிழர் தாயகத்தின் அரசியல் புவியியலை மாற்றியமைப்பதன் மூலம் இந்தியாவிற்கு உரித்தான இந்து சமுத்திர புவிசார் அரசியலை வெற்றிகொள்வதே சிங்களப் பேரினவாதத்தின் மூலோபாயம் ஆகும். இந்த மூலோபாயத்திற்கு தமிழினம் தொடர்ந்து பலியாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வட-கிழக்கு வாழ் தமிழர் தாயக நிலத்தின் பலம் அந்த நிலத்தின் மீது குடியிருக்கும் தமிழ் மக்களின் இருப்பியே தங்கியுள்ளது. எனவே தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக் குறியாக்குவது , அவர்களின் இனப்பரம்பல் செறிவை குறைப்பது சிங்கள பௌத்த இனவாதத்திற்கு அவசியமாகிறது.

அதற்காக சிங்களக் குடியேற்றத்தால் தமிழ் மண்ணை முற்றுகையிடுட்டு கபளீகரம் செய்வதை முதன்மையான மூலோபாயமாக வகுத்துக் கொண்டார்கள்.எனவே படிப்படியாக சிங்களக் குடியேற்றங்கள் மூலம் தமிழர் நிலத்தை கபளீகரம் செய்து அரசியல் புவியியலை (Political Geography) மாற்றி விடுவது தான் சிங்கள ஆட்சியாளர்களின் குறிக்கோளாகும்.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்திலிருந்து தமிழரின் தாயகக் கொள்கையை சூறையாடவில்லை. இத்தகைய நில அபகரிப்பை சிங்களக் குடியேற்றங்களின் மூலமும், தமிழ் தலைவர்களுடனான இணக்க அரசியல் மூலமும் சிங்களத் தலைவர்கள் தமது குறிக்கோளை திட்டமிட்ட கூர்மையான இராஜதந்திர அடிப்படையில் தொடர்ந்து வெற்றியின் பாதையில் நகர்த்திச் செல்கின்றனர்.

அதேநேரத்தில், தமிழ் தலைவர்கள் எந்தவித மூலோபாயங்களும் அற்றவர்களாய் வெறும் அமைச்சுப் பதவிகளுக்காகவும், அற்ப சொற்ப சுயநலத்திற்காகவும், தமிழ் மண்ணை விற்றுப் பிழைக்கும் அரசியலில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் கட்சித்தலைவராய் இருந்த ஜி.ஜி.பொன்னம்பலத்தைப் பிள்ளையார் சுழியாகக் கொண்டு இன்றைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் வரை தொடர்ந்து தமிழின அழிவுப் பாதைக்கான வரலாறு துயரகரமாய் நீண்டு செல்கிறது.

இலங்கை சுதந்திரமடைவதற்கு சற்று முந்திய காலத்தில் இந்திய பேரரசிடம் இருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்ற உள்நோக்கின் அடிப்படையில் 1947 ஆம் ஆண்டு சிலோன்-பிரிட்டிஷ் பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை அன்றைய சிங்களத்தலைவர் டி .எஸ் .சேனநாயக்கா மேற்கொண்டார்.

இதன் மூலம் இந்தியாவிடமிருந்து புவிசார் அரசியல் ரீதியாக தமக்கு ஏற்படக்கூடிய இந்தியஅச்சுறுத்தல் என்ற ஒரு தத்தை சிங்கள பௌத்த அரசு மேற்படி ஒப்பந்தத்தின் மூலம் அன்றைய நிலையில் தாண்டி கொண்டது.

அதேவேளை, சர்வதேச ரீதியாக இதற்கு பின்னாலிருந்த சிங்களத் தலைவர்களின் அரசியல் இராஜதந்திர வியூகத்தை அன்றைய தமிழ் தலைவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் உட்பட எந்தொரு தமிழ் தலைவர்களாலும் புரிந்துகொள்ள முடியவில்லை.

அனைத்து தமிழ் தலைவர்களினதும் அரசியல் ""அப்பக் கோப்பை "" தனத்திற்கு தமிழினம் பலியாகக்கூடிய அரசியல் அடித்தளம் இவ்வாறு உருவானது.

அதேவேளை ,புவிசார் அரசியல் ரீதியாகக் உடனடியாக காணப்பட்ட ஆபத்தை இந்த பாதுகாப்பு ஒப்பந்தத்தின் மூலம் தற்காலிகமாக கடந்த நிலையில் , அந்த தற்காலிகப் பாதுகாப்பை நிரந்தரம் ஆக்குவதற்கான மதிநுட்பமான திட்டம் தான் தமிழர் தாயகத்தை படிப்படியாக சிங்களக் குடியேற்றத்தின் மூலம் கபளீகரம் செய்வது.

இதனை தமிழ்த் தலைவர்களைக் கொண்டே சிங்கள தேசம் செயற்படத் தொடங்கியது.இலங்கையின் வட-கிழக்கு தமிழர் தாயகம் தான் இந்தியாவிற்கான இந்த பிராந்தியத்தின் புவிசார் அரசியலிற்கான அடிப்படை வளமும் தளமுமாகும்.

அந்த பலத்தை உடைப்பதற்கு அன்றைய டி. எஸ்.சேனநாயக்கா அரசாங்கம் தமிழ் காங்கிரஸ்கட்சியை தன்னுடன் இணைத்துக் கொண்டு கிழக்கு மாகாணத்தில் பட்டிப்பளை ஆற்றினை கல்லோயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, விவசாய அபிவிருத்தி என்ற பெயரில் சிங்களக் குடியேற்றத்தை மேற்கொண்டார்.

டி.எஸ். சேனநாயக்க அரசாங்கத்தில் கைத்தொழில் அமைச்சராக பதவியேற்ற ஜி.ஜி பொன்னம்பலத்தை அரவணைத்தவாறு அவரின் ஆதரவுடன் 1949 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட கல்லோயா குடியேற்றத் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

தொடர்ந்து 8 ஆண்டுகள் ஜி.ஜி பொன்னம்பலம் அமைச்சராக இருந்து கிழக்கு மாகாணத்தில் கல்லோயா அபிவிருத்தித் திட்டம் , திருகோணமலை மாவட்டத்தில் அல்லை, கந்தளாய் சிங்களக்குடியேற்றம் என்பவற்றை தன் அமைச்சுப் பதவி காலத்தில் நிறைவேற்ற உதவியதோடு கிழக்கு மாகாணத்தை சிங்களவர்களுக்கு உறுதி முடித்துக் கொடுக்கும் பெரும் பழிபாதகத்தை தமிழினத்திற்கு பொன்னம்பலம் செய்தார்.

அதே அமைச்சுப் பதவிக்காக மலையகத் தமிழர்களின் வாக்குரிமையை பறிக்கும் சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்திருந்தால் இந்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டிருக்கும். ஆனால் ஜி.ஜி அவர்கள் எதிர்த்து வாக்களிக்காமல் வேண்டுமென்றே வாக்களிப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்தார்.

இவ்வாறு அந்த சட்டமூலம் நிறைவேறுவதற்கு அனுசரணையாக இருந்து மலையகத் தமிழர்களை நாடற்றவர்களாக ஆக்கும் பழியிலும் பொன்னம்பலம் பங்காளியானார்.

மலையக மக்களின் குடியுரிமை பறிப்பின் மூலம் சுமார் ஐந்தரை லட்சம் தமிழர்கள் நாடு கடத்தப்பட்டதன் மூலம் மலையகத்தின் அரசியல் புவியியலை பௌத்த பேரினவாதம் தனக்குச் சாதகமாக மாற்றுவதற்கு தமிழ் தலைவர்கள் துணை போனார்கள்.

இந்நிலையில் தமிழ் மக்களின் உரிமைப் பிரச்சினை தீரும் வரை அமைச்சுப் பதவி பெறமாட்டோமென சூளுரைத்து காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தமிழரசுக் கட்சியை திரு. எஸ். ஜே.வி. செல்வநாயகம் உருவாக்கினார்.

ஆனால் பின்னாளில் 1965 ஆம் ஆண்டு டட்லி - செல்வா ஒப்பந்தத்தின் மூலம் தமிழரசுக்கட்சி, ஆளும் கட்சியுடன் இணைந்து திரு. மு.திருச்செல்வம் அவர்களுக்கு அமைச்சுப் பதவியைப்பெற்றுக்கொடுத்து பேரினவாத அரசில் பங்கு கொண்டமையும் இத்துடன் கூடவே பதிவுசெய்யப்பட வேண்டிய விடயமாகும்.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அமைச்சுப் பதவி பெற்றதை ஒரு குற்றச்சாட்டாக காட்டி தமிழரசுக் கட்சியை உருவாக்கியவர்கள் பின்பு சாக்குப்போக்கு காரணங்களை கூறி அமைச்சுப் பதவி பெற்று அரசில் அங்கம் வகித்தார்கள் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழரசுக் கட்சி அமைச்சுப் பதவி வகித்த காலத்தில் ""பசுமைப் புரட்சி"" என்ற செயல் திட்டத்திற்கு உலக வங்கியின் உதவியைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் ஏற்கெனவே குடியேற்றப்பட்ட சிங்களக் குடியேற்றங்கள் மேன்மேலும் ஸ்தாபிதம் அடையச் செய்வதற்கு தமிழரசுக்கட்சியினர் பெரும் தொண்டாற்றினார்.

கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட அனைத்து சிங்கள குடியேற்றங்களுக்கும் தந்தையாக டி. எஸ். சேனநாயக்க இருந்தார் என்றால், ஜி.ஜி.பொன்னம்பலம் அந்தச் சிங்கள குடியேற்றத்திற்குத் தாயாக இருந்தார் என்பதே உண்மை.

இலங்கை சுதந்திரமடைந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் சிங்கள மக்களின் குடித்தொகை 1% காணப்பட்டது. ஆனால் அதன் பின் மேற்கொள்ளப்பட்ட குடியேற்றத்தின் மூலம் சிங்கள மக்கள் தொகையானது ஏறக்குறைய 30% மாக இன்று காணப்படுகிறது.

கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றத்தினால் விளைந்த அனைத்து சீரழிவுகளுக்கும் தமிழ் தலைவர்களே முதலில் பொறுப்பு கூற வேண்டும். இவர்களுடைய தூரநோக்கற்ற, புத்திசாலித்தனமற்ற சுயநல அரசியலின் விளைவே இன்று கிழக்கு மாகாணம் பறிபோயுள்ளமைக்கான காரணமாகும்.

இவ்வாறு கிழக்கு மாகாணத்தின் பெரும் பகுதியில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொண்டு கிழக்கு மாகாணத்தின் அரசியல் புவியியலைத் தமக்கு சாதகமாக மாற்றியமைபதில் ருசி கண்ட சிங்களப் பேரினவாதம் அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டமாக வடக்கையும், கிழக்கையும் புவியல் தொடர்பற்று பிரிப்பதற்காக மணலாற்றுப் பகுதியை "வெலிஓயா" எனப் பெயர் மாற்றம் செய்து "வெலிஓயா சிங்கள குடியேற்றத் திட்டம்", கூடவே "மகாவலி அபிவிருத்தி" என்ற பெயரில் மகாவலி குடியேற்றத் திட்டம் எனப் பல சிங்கள குடியேற்றங்களை அரசு தொடர்ந்து மேற்கொள்ளலாயிற்று.

இந்த மணலாறு குடியேற்றத்தின் மூலம் தமிழர் தாயகத்தின் வடக்கு-- கிழக்கு மாகாணங்களின் நிலத் தொடர்பைத் துண்டித்து மணலாற்றுக் பகுதியை அனுராதபுரம் மாவட்டத்துடன் இனைப்பதன் மூலம் தமிழர் தாயகத்தை இரண்டு துண்டாக வெட்டிப்பிளப்பதில் வெற்றி கண்டு வருகின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்னர் தமிழரசுக்கட்சியின் "நல்லாட்சி"அரசாங்க காலத்தில் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருட் சின்னங்களை பாதுகாத்தல் மற்றும் மரபுரிமை சின்னங்களைப் பாதுகாத்தல் என்ற போர்வையில் திருகோணமலை மாவட்டத்தில் மூன்று இடங்களில் தலா 500 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் புத்த விகாரைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கான ஜனாதிபதி செயலணி என்ற ஒன்றை உருவாக்கி அதில் தனிச் சிங்களவர்களையே உறுப்பினர்களாக நியமித்து அவர்களின் துணை கொண்டு தமிழர் நிலப்பரப்பை சூறையாடும் செயல் திட்டம் வேகமாக அண்மைக் காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய நில அபகரிப்பு அடுத்த கட்டமாக வடகிழக்கு இணைப்பு பகுதிக்குள் அடங்கும் ஜன் ஓயா ஆற்று பிரதேசத்தில் புதிய நீர்த்தேக்கம் ஒன்றை அமைத்து சிங்கள குடியேற்றத்திற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த நிலையில் உள்ளது.

அதே நேரத்தில் மகாவலி கே . எல் . வளையங்களின் விருத்தி என்ற பெயரில் வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவின் பெரும் பகுதியும், முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு பகுதியும் கபளீகரம் செய்யப்படுவதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பமாகிவிட்டன.

இத்தகைய நில அபகரிப்பில் தொடர் நிகழ்ச்சி நிரலில் ஒரு பகுதியாக தற்போது தண்ணிமுறிப்பு குளம் பகுதியில் உள்ள குருந்தூர் மலைப் பகுதியில் தொல்பொருள் ஆய்வு என்ற கோதாவில் புத்த சின்னங்கள் காணப்படுவதாக கூறிக்கொண்டு புத்த விகாரை அமைக்கும் நடவடிக்கைகளை அரசு ஈடுபட்டிருக்கிறது.

அதில் ஓரிடத்தில் புத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டால் அதனை பராமரிப்பதற்கு பௌத்த மதகுருக்கள் தேவைப்படும், கூடவே விகாரையை பராமரிப்பதற்கென்று காரணங்காட்டி சிங்கள பௌத்தர்களை அப்பகுதியில் குடியேற்றுவதும், அதன் தொடர் நடைமுறைகள் ஆகும்.

குடியேற்றத்தின் ஊடாக அப்பிரதேசத்தில் தமிழ் மக்களின் இருப்பை கேள்விக்குறியாக்கி, அவர்களை அச்சுறுத்தி அந்தப் பிராந்தியத்தில் இருந்து வெளியேற்றுவது தான் சிங்கள அரசாங்கத்தால் கடந்த முக்கால் நூற்றாண்டாக மேற்கொள்ளப்பட்டு வரும் தமிழினத்துக்கு எதிரான கட்டமைக்கப்பட்ட இன அழிப்புக்கு எதிராக ஆக்கபுர்வமான ஜனநாயக வழிப்போராட்டங்கள் எதனையும் இன்றுவரை எந்த தமிழ்த்தலைமைகளும் மேற்கொள்ளவில்லை. இவர்கள் எப்போது தான் தமிழ் மக்களுக்காக போராடப்போகிறார்கள்??