அன்று அண்ணன் ஜனாதிபதியே செயற்படுத்தவில்லை!தம்பி ஜனாதிபதியிடம் எதிர்பார்க்கவே முடியாது:மனோ கணேசன்

Report Print Rakesh in அரசியல்
217Shares

இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் சபையில் எதிர்வரும் மார்ச் மாதம் கொண்டு வரவுள்ள பிரேரணையைச் சமாளிக்கும் வகையில், கண்துடைப்புக்காகவே புதிய ஆணைக்குழுவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நியமித்துள்ளார் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பி.பி.சி. தமிழுக்கு வழங்கிய செவ்வியில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் மேலும் தெரிவித்ததாவது,

ஐ.நா. மனித உரிமைகள் சபையைச் சமாளித்து, மீண்டும் கால அவகாசம் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே இந்தப் புதிய ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கு எதிராகக் கடும் தொல்லை தரும் சர்வதேச மேகங்கள் சூழ்கின்றமையினாலேயே, இலங்கை ஜனாதிபதி இவ்வாறான ஆணைக்குழுவொன்றை நியமித்துள்ளார்.

உள்நாட்டுக்குள்ளேயே தமிழ் மக்களின் மனங்களை வெல்லக்கூடிய செயற்பாட்டை இந்த அரசு முன்னெடுத்திருக்க வேண்டும்.அதன் மூலமாக இலங்கை சிங்கள பௌத்த நாடு என்ற வரையறைக்கு அப்பால் சென்று,பல்லின, பல்மொழி, பன்மத நாடு என்ற அடிப்படையை இலங்கை அரசு முன்னெடுத்திருக்குமானால், இத்தகைய கடுமையான சர்வதேச நெருக்கடிகளைச் சந்திக்க வேண்டிய தேவைப்பாடு இலங்கைக்கு இருந்திருக்காது.

இன்று நாடு எதிர்நோக்கியுள்ள நெருக்கடியான நிலைமைக்கு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தலைமையிலான அரசு தான் பொறுப்பை ஏற்க வேண்டும்.அதனால், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த ஆணைக்குழு ஒரு கண்துடைப்பு நடவடிக்கையாகும்.

இதற்கு முன்னர் இலங்கையில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் கூட, கண்துடைப்பு ஆணைக்குழுக்களாகவே இருந்துள்ளன.

மஹிந்த ராஜபக்‌ச, ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில், அவரால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழு, மிகச் சிறந்த, முற்போக்கான பரிந்துரைகளை முன்வைத்திருந்தது.

அந்த பரிந்துரைகளை கூட அண்ணன் ஜனாதிபதி செயற்படுத்தவில்லை.இந்நிலையில், இன்று தம்பி ஜனாதிபதியிடம் அதனை எதிர்பார்க்கவே முடியாது. ஆகவே,இது கண்துடைப்பு என்பதே எனது உறுதியான நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.