போர்க்குற்றவாளிகளை இலக்கு வைத்து கடும் நடவடிக்கைகள்

Report Print Rakesh in அரசியல்
260Shares

இலங்கையில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார்கள் என நம்பகமாக குற்றஞ்சாட்டப்பட்டவர்களை இலக்கு வைத்து அவர்களுக்கு வெளிநாடுகளுக்கு பயணத் தடையை விதிக்க வேண்டும் எனவும், அவர்களின் சொத்துக்களை முடக்க வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை பரிந்துரைத்துள்ளது.

இலங்கை தொடர்பில் இம்முறை ஜெனிவா கூட்டத் தொடரில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையார் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையிலேயே மேற்படி விடயம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என அறியவருகின்றது.

இந்த அறிக்கையின் முற்கூட்டிய பிரதி இலங்கையின் வெளிவிகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேக்கு ஐக்கிய மனித உரிமைகள் சபை அனுப்பிவைத்துள்ளது.

இது தொடர்பாகப் பதிலளிப்பதற்கு எதிர்வரும் 27ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் மேற்படி விடயம் குறித்து வெளிவிகார அமைச்சு தீவிர கவனம் செலுத்தி வருகின்றது எனத் தெரியவருகின்றது.

ஜெனிவா அமர்வில் இம்முறை இலங்கை கடும் நெருக்குவாரங்களைச் சந்திக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், பிரதான எதிர்க்கட்சியான சஜித் அணியினரும் ராஜபக்ச அரசை எச்சரித்து வருகின்ற நிலையில், அதை நிரூபிக்கும் வகையில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.