ஜனாதிபதியின் புதிய ஆணைக்குழுவின் நியமனம் அவமதிப்பான முயற்சி: மனித உரிமை கண்காணிப்பகம்

Report Print Steephen Steephen in அரசியல்
180Shares

ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மேலும் ஆணைக்குழுவை நியமித்துள்ளமை குறித்து உலகில் முன்னணி சர்வதேச மனித உரிமை அமைப்பு கவனம் செலுத்தி வருகிறது.

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதிராக சர்வதேச நடவடிக்கைகளை தவிர்க்கும் நோக்கில் மேற்கொள்ளும் இவ்வாறான செயல்கள் “அவமதிப்பான முயற்சிக்கு வெளிநாட்டு அரசாங்கங்கள் அடிப்பணியக் கூடாது என மனித உரிமை கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியமை தொடர்பில் இதற்கு முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் செய்த விசாரணைகள் குறித்து ஆராய்ந்து, அது சம்பந்தமாக எடுக்க வேண்டிய விதம் தொடர்பான பரிந்துரைகளை வழங்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, மூன்று பேர் கொண்ட ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.

மனித உரிமைகள் மற்றும் சர்வதேச மனிதாபிமான சட்டம் மற்றும் கடுமையான குற்றங்களின் மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஆணைக்குழு நியமிப்பதற்கான வர்த்தமானி கடந்த ஜனவரி 21 ஆம் திகதி அரசாங்கம் வெளியிட்டது.

இலங்கை அரசு மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தனது உறுதிப்பாட்டை நிறைவேற்றியுள்ளதா என்பதை ஆராய அடுத்த மாதம் இறுதியில் ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை விசாரணைக்கு முன்னதாக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்துள்ளார்.

இலங்கையின் பல தசாப்த கால உள்நாட்டுப் போரின் போது மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சர்வதேச அழுத்தத்தைத் திசை திருப்ப குறைந்தபட்சம் சுமார் 12 உள்ளக விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டன என மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உறவினர்களைக் கண்டுபிடிக்க ஆணைக்குழுவின் அறிக்கைகள் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவவில்லை.

ஆணைக்குழுக்களின் விசாரணைகள் பெரும்பாலும் வெளியிடப்படவில்லை எனவும், அத்துடன் ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் ஒருபோதும் செயல்படுத்தப்படவில்லை எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச பார்வையாளர்கள், ஐ.நா வல்லுநர்கள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் ஆகியோர் இலங்கையில் நீதித்துறை செயல்முறை தொடர்பாக காணப்படும் ஆழமான நிறுவன சிக்கல்கள்குறித்து மீண்டும் மீண்டும் கேள்வி எழுப்பியதை மனித உரிமைகள் கண்காணிப்பகம் தனது அறிக்கையில் நினைவு கூர்ந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரின் முடிவில் நடந்த குற்றச்செயல்கள் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியதுடன், ஐ.நாவின் தொடர்ச்சியான அறிக்கைகள் இத்தகைய போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கான ஆதாரங்களை முன்வைத்தன.

முந்தைய விசாரணைகளின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழைப்பு விடுக்கும் தீர்மானத்தை சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழு 2012 ஆம் ஆண்டு நிறைவேற்றியது.

அது நடக்காதபோது, ​​சர்வதேச குற்றங்களுக்கு தீர்வு காண சர்வதேச தலையீட்டின் அவசியத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

2015 ஆம் ஆண்டில், இலங்கை மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டின் தீர்மானத்தில் இணைந்தது, இதில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள், புலனாய்வாளர்கள் மற்றும் பாதுகாப்பு சட்டத்தரணிகள் பொறுப்புக்கூறல் பொறிமுறையும், உண்மை, நீதி, இழப்பீடு மற்றும் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதி செய்வதற்கான உறுதிப்பாடும் ஐ.நா மனித உரிமை பேரவையின் யோசனையில் அடங்கும்.

பேரவை மெதுவாக முன்னேறியதால், இலங்கை அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதற்கான இந்த காலத்தை நீட்டிக்க ஆர்வமாக இருந்தது.

அத்துடன், 2019 நவம்பரில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர், அந்த யோசனைகளை நிறைவேற்றுவதற்கான முன்னேற்றத்தின் பாதையும் துரிதமாக மாற்றப்பட்டது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

கடந்த பெப்ரவரியில், பேரவையின் தீர்மானத்திற்கான அதன் உறுதிப்பாட்டை ஏற்கபோவதில்லை என இலங்கையின் தற்போதைய அரசாங்கம் கூறியது. இது ஆச்சரியமல்ல."

2005-2015 கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதில் பெரியளவில் ஈடுபட்டார் எனவும் மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிக்கு வந்த பின்னர், முக்கிய பதவிகளுக்கு போர் குற்றவாளிகளை நியமித்ததையும், பொதுமக்களைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்த ஒருவருக்கு மன்னிப்பு வழங்கியதையும் கண்காணிப்பகம் நினைவுகூர்ந்துள்ளது.