5 எம்.பிக்கள் அரசாங்கத்தின் முகவர்களாக இருப்பதாக கூறுகிறார் செ.கஜேந்திரன்

Report Print Theesan in அரசியல்
355Shares

நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன், டக்ளஸ், திலீபன், வியாளேந்திரன், பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் முகவர்களாகவும், அடிமைகளாகவும் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட மனித உரிமை மீறல்களிற்கு எதிராக சர்வதேச விசாரணை வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உறுதியாக இருக்கிறோம். இது எமது நீதிக்கான போராட்டம்.

இலங்கையில் இருக்கும் கட்டமைப்புகளால் தமிழர்களின் பிரச்சினைகளிற்கான நீதி கிடைக்காது என்பது நிரூபனமான வகையிலேயே சர்வேதச குற்றவியல் நீதிமன்றை நோக்கி நாங்கள் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அதில் நம்பிக்கை இல்லை என்று சொல்வதற்கு முன்பாக சரியான முயற்சிகளை செய்திருக்கிறோமா என்பதை நோக்க வேண்டும். அத்துடன் சர்வதேசத்தை நோக்கி செல்லும்போது பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நேர்மையாக செயற்பட வேண்டும்.

கடந்த ஜனவரி மாதம் அனைத்து தரப்பாலும் ஒரு காத்திரமான செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது. அந்த விடயத்தை முற்றாக வெறிதாக்கும் வகையில் சுமந்திரனதும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினதும் செயற்பாடுகள் இடம்பெற்றிருக்கிறது.

தமிழ் கட்சிகளால் மனித உரிமை பேரவைக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் உள்ள விடயங்களிற்கு வலுச்சேர்க்கும் விதமாக பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணி நடத்தப்பட்டது.

ஆனால் அது அப்படியல்ல என்று வடக்கு, கிழக்கில் உள்ள 18 நாடாளுமன்ற உறுப்பினர்களில் பத்து பேரை கொண்ட அணியின் பேச்சாளர் சொல்லியிருக்கிறார் என்றால் அதற்கு மேல் உலகம் என்ன முடிவை எடுக்க முடியும்.

ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன், டக்ளஸ், திலீபன், வியாளேந்திரன், பிள்ளையான் ஆகியோர் அரசாங்கத்தின் முகவர்களாக அடிமைகளாக இருக்கிறார்கள்.

இந்த நிலையில் கூட்டமைப்பு இவ்வாறான கருத்தினை சொல்லி வந்தால் நாங்கள் உலகத்தை நம்ப வேண்டாம் என்ற முடிவிற்கு எப்படி வரமுடியும்.

இங்கு எங்களுடைய விரல்களே எமது கண்களை குத்தியிருக்கிறது. எனவே மக்கள் விழிப்படைய வேண்டும்.

சரியான நிலைப்பாட்டில் சர்வதேச சமூகத்தை நோக்கி செயற்பட்டால் இந்த பூகோளபோட்டியை எங்களுக்கு சாதகமாக்கி கொள்ள முடியும். அதில் நம்பிக்கை இருக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.