யாழ். குடாநாட்டில் எரிசக்தி திட்டம்! இந்தியாவின் கவலையை தொடர்ந்து சீனா வெளியிட்டுள்ள அறிவிப்பு

Report Print Murali Murali in அரசியல்
145Shares

யாழ். தீபகற்பத்தில் அமைந்துள்ள மூன்று தீவுகளில் முன்னெடுக்கப்பட்டுள்ள மின் திட்டம் குறித்து கவலைகள் எழுந்ததையடுத்து சர்வதேச ஏல நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறு சீனா இலங்கைக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு இலங்கையில் பல்லாயிரக்கணக்கான "ஏழை மக்கள்" இந்த திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என்று சீனாவில் சினோசோர்-எடெக்வின் குழுமம் அறிவித்துள்ளது.

சர்வதேச ஏல நடைமுறைகளுக்கு அமைய ஆசிய அபிவிருத்தி வங்கியால் இந்த திட்டத்திற்கு நிதியுதவி வழங்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.

ஏல விதிமுறைகளின்படி, திட்டத்தின் கட்டுமானத்திற்கும் ஒப்படைப்பிற்கும் மட்டுமே குழுமம் பொறுப்பாகும். அனைத்து செயற்பாடுகளும் இலங்கை மின்சார சபையின் முழுமையான கண்காணிப்பு மற்றும் நிர்வாகத்தின் கீழ் உள்ளன.

இலங்கையின் சட்டங்கள், விதிமுறைகள் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் இலங்கை மின்சார சபையின் தொடர்புடைய தேவைகளை கண்டிப்பாக பின்பற்றுவதாகவும் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சீன நிறுவனம் எந்தவொரு மூன்றாம் தரப்பினரின் மூர்க்கத்தனமான தலையீட்டை எதிர்ப்பதாகக் கூறியுள்ளது.

இந்த திட்டத்தை செயல்படுத்த சர்வதேச ஏல நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவும், ஒப்பந்தக்காரரின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாக்கவும், அதன் சொந்த நம்பகத்தன்மை மற்றும் சர்வதேச நற்பெயரைப் பாதுகாக்கவும் இலங்கை அரசாங்கத்திற்கு திட்டத்திற்கு பொறுப்பான சீன குழுமம் அழைப்பு விடுத்தது.

இதேவேளை, யாழ்ப்பாண தீபகற்பத்தில் அமைந்துள்ள நைனாதீவு, நெடுந்தீவு மற்றும் அனலைத்தீவில் சீனாவில் சினோசோர்-எடெக்வின் கூட்டு முயற்சி எரிசக்தி திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவை அனுமதி வழங்கியது.

எவ்வாறாயினும், இந்த திட்டம் குறித்து இந்தியா கவலை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.