ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய்வதற்கு பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை எனவும், அதற்கு அறிவு இருந்தால் போதும் எனவும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை ஆராய ஜனாதிபதி நியமித்துள்ள குழுவில் இருக்கும் சிலர் சாதாரண தரப் பரீட்சையில் கூட தேர்ச்சி பெறாதவர்கள் என பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை சுமத்தியிருந்த குற்றச்சாட்டு குறித்து நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே வாசுதேவ நாணயக்கார இதனை கூறியுள்ளார்.
கேள்வி - அறிக்கையின் படி நியாயம் கிடைக்குமா?
பதில் - அறிக்கையை வாசிக்கும் வாய்ப்பு இன்னும் கிடைக்கவில்லை.
கேள்வி - ஜனாதிபதி நியமித்த குழு கூடியிருந்ததே. அந்த குழுவினர் என்ன கூறுகின்றனர்?
பதில் - அறிக்கையில் உள்ள விடயங்களை ஆராய்ந்து வருவதாக அவர்கள் கூறினர். அவர்கள் கருத்து வெளியிடுவார்கள்.
கேள்வி - இந்த குழு தொடர்பில் கர்தினால் உட்பட மக்கள் கடும் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனரே?
பதில் - ஜனாதிபதி நியமித்த குழு. ஜனாதிபதி மீதுள்ள நம்பிக்கைக்கு அமைய அவர் நியமித்த குழுவின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.
கேள்வி - குழுவில் சாதாரண தரத்தில் தேர்ச்சி பெறாதவர்களும் இருப்பதாக கர்தினால் கூறுகிறார். எப்படி இதனை நம்புவது எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பதில் - இல்லை. இந்த குழு அறிக்கையில் இருக்கும் விடயங்களையோ, அறிவியல் ரீதியான விடயங்கள் குறித்தோ கலந்துரையாடாது. அறிக்கையில் உள்ள சில முடிவுகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து தீர்மானம் ஒன்றை எடுக்கும். இதற்கு பரீட்சைகளில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியமில்லை. அறிவு இருந்தால் போதும்.