தடுப்பூசி வழங்கும் போது முன்னுரிமை பட்டியலுக்கு பதிலாக முக்கியஸ்தர்களின் பட்டியல் - அனுரகுமார திசாநாயக்க

Report Print Ajith Ajith in அரசியல்
28Shares

கோவிட் தடுப்பூசியை வழங்கும் போது முன்னுரிமை பட்டியலுக்கு பதிலாக முக்கியஸ்தர்களின் பட்டியல்களை அரசாங்கம் முன்னிலைப்படுத்துகிறது என்று ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

ஒரு நாடு ஒரு சிறிய அளவிலான தடுப்பூசிகளைப் பெறும் போது, அது இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கப் பயன்படுத்தப்பட வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

இதன் அடிப்படையில் கோவிட் தொற்றினால் ஏற்படும் இறப்புகளைக் குறைக்க இலங்கையில் தேசிய தடுப்பூசி வரிசைப்படுத்தல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

எனினும் சுகாதார அதிகாரிகளால் இறுதி செய்யப்பட்டுள்ள படி முன்னுரிமை பட்டியலைப் பின்பற்ற அரசாங்கம் தவறிவிட்டது என்று அனுரகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.

சுகாதார சேவை ஊழியர்கள், பாதுகாப்பு படைகள் மற்றும் காவல்துறையினர் முன்னுரிமை பட்டியலில் முதலிடத்தில் இருந்தனர்.

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் இந்த பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளனர்.

எனினும் தடுப்பூசி செலுத்துதல் முக்கியஸ்தர்களின் பட்டியலின் படி மேற்கொள்ளப்படுவதாக அனுரகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றவர்களுக்கு முன்னதாகவே தடுப்பூசிகளைப் பெற்றனர்.பொது மக்கள் பல மணி நேரம் வரிசையில் தவிக்கும் போது, அரசியல் விசுவாசமுள்ளவர்கள் பின் கதவு வழியாக வந்து தடுப்பூசிகளைப் பெறுகிறார்கள்.

இது மாற்றப்பட்டு தேசிய தடுப்பூசி வரிசைப்படுத்தல் திட்டத்தின் படி எதிர்காலத்தில் வரவிருக்கும் தடுப்பூசிகளை வழங்குமாறு அனுரகுமார அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.