தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து கட்டமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படும் தமிழ்த் தேசியப் பேரவையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பங்கேற்க மாட்டாது என அக்கட்சியின் தலைவரும், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி எவ்விதமான தீர்மானத்தினை எடுத்துள்ளது என்பது குறித்து வினவியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளை இணைத்து தமிழ்த் தேசியப் பேரவை என்ற கட்டமைப்பை உருவாக்குவது நல்லவிடயமொன்றுதான். இதுபற்றி நீண்ட நாட்களாக கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன.
நாங்கள் ஒற்றுமைக்கு தடையானவர்கள் அல்லர். அதனை விரும்பாதவர்களும் அல்லர். ஆனால் ஒற்றுமை என்பது கொள்கை அடிப்படையிலானதாக இருக்க வேண்டும். அண்மைய காலங்களில் ஒற்றுமையின் பெயரால் தனிநபர் நலன்களை அடிப்படையாக வைத்தே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றமை அனைவரும் அறிந்த விடயமாகும்.
அந்த வகையில் தமிழ்த் தேசியப் பேரவையில் பங்கேற்பதற்கான அழைப்பொன்றை மாவை.சோ.சேனாதிராஜா விடுத்திருந்தார். எனினும் நாம் அதில் பங்கேற்பதில்லை என்றே தீர்மானித்திருக்கின்றோம்.
அதற்கு முதலாவது காரணம் கொள்கை அடிப்படையிலானது. இரண்டாவது காரணம், சுமந்திரன், சாணக்கியன் போன்றவர்களின் தமிழ் மக்களின் அபிலாஷைகளை மலினப்படுத்தும் நடவடிக்கைகள் ஆகும்.
இதற்கு அண்மைய உதாரணமொன்றை இங்கு குறிப்பிடலாம் என்று கருதுகின்றேன்.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான பேரணியானது ஏறக்குறைய ஒரு லட்சம் மக்களின் எழுச்சியான பங்கேற்பில் நடைபெற்றதொன்றாகும். மூன்று கூட்டு அரசியல் தரப்புக்கள் ஜெனிவாவுக்கு எழுத்து மூலமான நிலைப்பாடுகளை ஒன்றிணைந்து அனுப்பியதன் பின்னர் நடைபெற்ற இந்த பேரணியானது நிச்சயமாக ஜெனிவாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட ஆவணத்தினை வலுப்படுத்துவதாக அமைந்திருந்தது.
ஆனால் சாணக்கியன், சுமந்திரன் போன்றவர்கள் அதனை தமது அரசியல் நலன்களுக்காக பயன்படுத்தியமையோடு மட்டும் நிற்காது, அந்த உணர்வு பூர்வமான பேரணியை இலங்கை அரசங்கத்திடம் முன்வைக்கும் பத்து அம்சக் கோரிக்கையுடன் மட்டுப்படுத்தவே அதிகளவில் முனைப்புக் காட்டினர்.
குறிப்பாக சுமந்திரன் இந்த விடயத்தில் தீவிரமாகச் செயற்பட்டமையோடு, நாடாளுமன்றிலும் அவ்வாறான கருத்துக்களையே பதிவு செய்து தமிழர்களின் அபிலாஷைகளையே மலினப்படுத்திவிட்டார். இவ்விதமான செயற்பாட்டை மேற்கொண்டவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளராகவும், தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தராகவும் தொடர்ந்தும் செயற்படுவதற்கு இடமளித்திருக்கின்றார்கள்.
அவர் மீது இந்த விடயங்கள் தொடர்பில் எவ்விதமான கேள்விகளும் கேட்கப்படவில்லை. நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. அப்பாவி மக்களின் கோரிக்கைகள், எதிர்பார்ப்புக்களை மலினப்படுத்துபவரை பிரதிநிதியாகக் கொண்டிருக்கும் அரசியல் கட்சி பங்கேற்கும் தமிழ்த் தேசியப் பேரவையில் நாம் எவ்வாறு பங்கேற்க முடியும்?
அப்பேரவையானது கொள்கை வழியில் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யும் வகையில் பயணிக்கும் என்று எவ்வாறு கருத முடியும்?. ஆகவே தான் அவ்விதமான பொய்யான செயற்பாட்டாளர்களுடன் இணைந்து பயணிப்பதில்லை என்று தீர்மானித்துள்ளோம் - என்றார்.
You May Like This Video...