தமிழ் - முஸ்லிம் உறவை பிரிக்க அரசு சதித்திட்டம் - கூட்டமைப்பு எம்.பி. சுமந்திரன் குற்றச்சாட்டு

Report Print Rakesh in அரசியல்
129Shares

கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை கிளிநொச்சி மாவட்டம், இரணைதீவில் அடக்கம் செய்ய அரசு எடுத்துள்ள தீர்மானம் ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இது தமிழ் - முஸ்லிம் உறவைப் பிரிக்க அரசால் அரங்கேற்றப்படவுள்ள சதித்திட்டம் என்றும் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கோவிட் வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களை அவர்களின் சொந்த இடங்களிலுள்ள மைய வாடிகளில் அடக்கம் செய்ய அரசு தயங்குவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாஸாக்களை வைத்து இன முறுகலை ஏற்படுத்தும் கேவலமான அரசியல் நடவடிக்கைகளை அரசு உடன் நிறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முஸ்லிம் சகோதரர்களின் ஜனாஸாக்களுக்கு மதிப்பளித்து அவற்றை அந்தந்தப் பிரதேசங்களிலுள்ள மைய வாடிகளில் அடக்கம் செய்ய அரசு முன்வர வேண்டும் எனவும், முஸ்லிம் சகோதரர்களின் விருப்பமும் அதுவே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.