மேற்கு முனையத்தை இந்தியாவுக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு சு.க. எதிர்ப்பு!

Report Print Rakesh in அரசியல்
79Shares

கொழும்புத் துறைமுகத்தின் மேற்கு முனையத்தை வெளிநாட்டு நிறுவனத்துக்கு வழங்கும் அரசின் முடிவுக்கு அரச பங்காளிக் கட்சியான ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

"துறைமுகம், விமான நிலையம் ஆகியன தேசிய வளங்களாகும். அவற்றை வெளியாருக்கு வழங்குவதை ஏற்க முடியாது" என்று சு.கவின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் பங்களிப்புடன், இலங்கை துறைமுக அதிகார சபையுடன் இணைந்து அரச – தனியார் வர்த்தகமாக துறைமுகத்தின் மேற்கு முனையத்தை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு அரசு முடிவெடுத்துள்ளது.

அரசின் இந்த முடிவுக்கு தேசியவாத அமைப்புகளும், சில தொழிற்சங்கங்களும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இவ்வாறானதொரு நிலையிலேயே 14 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசின் பிரதான பங்காளியான சுதந்திரக் கட்சி எதிர்ப்பை வெளியிட்டது.

அதேவேளை, கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்கும் முடிவுக்குக் கடும் எதிர்ப்புகள் வலுத்ததால் அந்தத் திட்டத்தை அரசு கைவிட்டது. இந்தநிலையிலேயே மேற்கு முனையத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.