தனியாகப் போட்டியிட்டால் தமிழரசுக் கட்சிக்கே பெரும் வெற்றி!: யாழ் நிலவரம்

Report Print Samaran Samaran in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும். பிரிந்து போட்டியிட்டால் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியே வெற்றி பெறும் என்று கூறினர் யாழ்ப்பாணம் நகரை அண்டிய பிரதேசங்களைச் சேர்ந்த பொதுமக்களில் சிலர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஆசனப் பங்கீடு பூதாகர பிரச்சினையாக மாறியுள்ள நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளிடையே குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.

தமிழரசுக் கட்சியுடன் இணைந்து தேர்தலை எதிர்கொள்வதில்லை என்று ரெலோ அமைப்பு நேற்றுமுன்தினம் இரவு அறிவித்தது.

இந்தப் பின்னணியில் பொதுமக்கள் சிலரிடம் ஊடகம் ஒன்று கருத்துக்களைக் கேட்டறிந்தது.

கட்சிகள் பிரிந்து சென்று போட்டியிட்டால் தமிழரசுக் கட்சிதான் வெல்லும். அதுதான் மக்களிடத்தில் ஊறிய கட்சி என்று கூறினார் யாழ்ப்பாணம் நகரக் கடையொன்றில் பணியாற்றும் 63 வயதான சின்னத்துரை யோகரட்ணம்.

கூட்டமைப்பில் இருந்ததால் தான் மற்றக் கட்சிகள் வென்றவை. இல்லாட்டிச் சனம் வோட் போட்டிருக்காது. அதை அவர்கள் உணர வேண்டும் என்றார் வாகனச் சாரதியாகப் பணியாற்றும் திருநெல்வேலியைச் சேர்ந்த 67 வயதான சிவராஜா.

தமிழ்க் கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் உடைந்து செல்வது கவலை தருகின்றது என்றார் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணியாற்றும் சந்திரகுமார்.