புலிகள் நிராகரித்த உதயசூரியனின் மீள்வருகை வெற்றிதருமா? கஜேந்திரகுமாரின் எதிர்ப்பரசியல் சரியானதா?

Report Print Samaran Samaran in அரசியல்

தமிழர் அரசியலில் மிக மிக முக்கியமான அரசியல் காய் நகர்த்தல்கள் நடந்து கொண்டிருக்கின்றன, உதயசூரியன் சின்னதை இல்லாமல் செய்ய வீட்டுச் சின்னம் மீண்டும் கொண்டு வரப்பட்டது போல வீட்டுச் சின்னத்தை இல்லாமல் ஒழிக்க உதயசூரியன் சின்னம் மீண்டும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்துக்கள் பரவலாக முன்வைக்கபப்பட்டு கொண்டிருக்கின்றன.

இது வரை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக ஒன்றாக நின்று போராடிய அணிகள் சரி பாதியாக அல்லது மூன்றில் இரண்டு - மூன்றில் ஒன்றாக பிரிந்து நிக்கின்றன.

உதய சூரியனுக்கு எதிராக வீடு கொண்டு வரப்பட வேண்டிய காலத்தின் தேவையறிந்து அதை ஊக்கப்படுத்திய ஊடகங்கள், பொது அமைப்புகள் தற்போது உருவாகியுள்ள வீட்டுக்கு எதிரான உதய சூரியனை ஊக்கப்படுத்துவதா இல்லையா என்று முடிவெடுக்க முடியாமல் திகைத்து போய் நிக்கிறார்கள்.

காரணம் வீட்டுக்கு எதிரான கட்சி ஓன்று வேண்டும் என்ற எண்ண கருவை முதன் முதலில் உருவாக்கி கொஞ்சம் கொஞ்சமாக தண்ணி ஊற்றி வளர்த்த கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை காங்கிரஸ் 'நெய் திரண்டு வரும் நேரத்தில் தாழி உடைந்த நிலைமை' தான் கஜேந்திரகுமார் அவர்களுக்கு .

மறுபக்கம் உருவாகும் கூட்டணியை விட தானும் பெரிய கூட்டணி வைத்திருக்கிறேன் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருக்கிறார். அந்த வகையில் உருவாக்கியதே 'தமிழ் தேசிய பேரவை ' வெளியில் அது நான்கு அமைப்புகளின் கூட்டு என்று கூறப்பட்டாலும் அதன் உள்ளீடு என்பது ஏற்கனவே இருந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்ற அமைப்பில் உள்ள உள்ளீடு தான்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பதே காங்கிரஸ் மற்றும் பொது மக்களில் சிலர் சேர்ந்த அமைப்பு தான். இப்போ உருவாகி உள்ள தமிழ் தேசிய பேரவை யில் சம உரிமை கட்சி மட்டுமே கூடியுள்ளது. சம உரிமை கட்சியின் வாக்கு வங்கி பலம் எந்த அளவிலும் அவர்களுக்கு வலு சேர்க்காது. ஏனெனில் அவர்களுக்கென்று உள்ள வாக்குகள் ஒரு சில நூறுகளே.

எனவே தன்னுடைய அம்மாவை மீறி சைக்கிளை விட்டு வேற சின்னத்துக்கு போக முடியாத நிலையில் மீண்டும் உருவாகும் உதய சூரியன் கூட்டணியை துரோகியாக்க வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார்.

இப்பொழுது கூட்டமைப்பு மற்றும் தமிழர் விடுதலை கூட்டமைப்பு ( உதய சூரியன் தலைமையிலான புதிய கூட்டணி ) ஐ துரோகிகளாக்கி தன்னை தேசிய போராளி என்று மக்களை நம்ப வைக்க வேண்டிய வேலை அவருக்கு இருக்கு இந்த நிலையில் அவரை இதுவரை வீட்டின் எதிர்ப்பு சின்னமாக காட்டி வந்த ஊடகங்களும் இ பொது அமைப்புகளும் தொடர்ந்து அவரை வீட்டின் எதிர் சக்தியாக அடையாளப்படுத்துவதா ? அல்லது உதய சூரியனை அடையாளப்படுத்துவதா ? என்று முடிவெடுக்கமுடியாத நிலையில் நிக்கிறார்கள்.

ஆனால் இதுவரை கூட்டமைப்புக்கு எதிராக ஒன்றாக சமூக வலை தளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வந்தவர்கள் தங்கள் தங்கள் நிலைகளை தெரிவிக்க தொடங்கி விட்டார்கள்.

இதை விட அவ்வப்போது அரசியல் விமர்சனம் என்று கட்டுரைகள் எழுதும் அரசியல் விமர்சகர்கள் சிலர் இன்னும் வெளிப்படையாக கட்டுரை எழுத முடியாமல் நிக்கிறார்கள் . அவர்களது கட்டுரைகள் எதிர்வு கூறிய மாற்று தலைமை எது என்று அவர்கள் மக்களுக்கு நேரடியாக இப்போதைக்கு சொல்ல போவதில்லை . ஆனால் மறைமுகமாக ஒன்றை ஆதரிக்க முடிவெடுத்திருப்பார்கள்

சூரியனுக்கு பதிலாக வீட்டை கொண்டு வாங்கோ என்ற கருத்தியலுக்கு வலு சேர்த்ததோடு மட்டும் இல்லாமல் அதை கொண்டு வருவதற்கான பின்னணி வேலைகளிலும் முன்னுக்கு நின்றவர்கள் அரசியல் விமர்சகர்கள்.

என்னுடைய ஊகம் சரி என்றால் தற்பொழுது உருவாகியுள்ள வீட்டுக்கு பதிலாக உதய சூரியன் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணகருவுக்கு பின்னாலும் சில விமர்சகர்களும் சில அமுக்கக் குழுக்களும் இருக்கிறார்கள் தங்களால் உருவாக்கப்பட்ட எண்ண கருவுக்கு வலு சேர்க்க உதய சூரியனுக்கு கீழ் இன்னும் பலரை அவர்கள் சேர்ப்பார்கள்.

உதய சூரியன் தான் மாற்று தலைமை என்று காட்ட ஆனந்தசங்கரி ஐயா இடத்துக்கு மிக முக்கியமான ஆள் ஒருவர் கூட இறக்கப்படலாம். அந்த நபர் முன்னாள் விடுதலைப் புலிகளை ஈர்க்க கூடியவராகவும்இ புலம்பெயர் தமிழர்களை ஈர்க்க கூடியவராகவும் உள்ளவராக இருப்பார்.

எது எப்படியோ 2018 ஆம் ஆண்டு தமிழர் அரசியலில் பல திருப்பு முனைகளை கொண்ட ஆண்டாக அமைய போகிறது என்பது தெளிவாகிறது. ஆனால் இந்த மாற்று தலைமை க்கு வித்திட்டு உரமிட்டு தண்ணி ஊத்தி வளர்த்த கஜேந்திரகுமார் அண்ணன் நிலை தான் எந்த வித மாற்றமும் இல்லாமல் ஊடக வள மையத்துக்குள்ளேயே பேசி கொண்டிருக்கிற நிலையாக இருக்க போகிறது.

வைரவநாதன் சிவரதன்


You may like this video