புளொட் விலகல்! சூடுபிடிக்கும் யாழ் அரசியல் களம்

Report Print Samaran Samaran in அரசியல்

தேர்தல் பங்கீடு தொடர்பில் இணக்கம் காணப்பட்ட ஏற்பாடுகளை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைமை தன்னிச்சையாக - ஒருதலைப்பட்சமாக - தங்களிடமிருந்து பறிப்பதாகக் கருதி, விசனமடைந்து, கடும் அதிருப்தியுற்றிருக்கும் புளொட் கட்சி இந்த தேர்தலில் இருந்து ஒதுங்கியிருப்பது தொடர்பில் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றது என மிக நம்பகரமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

" தேர்தலில் இருந்து விலகுகிறோம் என்று பகிரங்கமாக அறிவித்து, கூட்டமைப்பின் வெற்றிவாய்ப்பை பங்கப்படுத்தும் கைங்காரியத்தை செய்யாமல் - சத்தம் சந்தடியின்றி - தேர்தலில் இருந்து ஒதுங்கியிருக்கும் போக்கை கடைப்பிடிக்குமாறு கட்சிக்குள் மூத்த தரப்புக்கள் சில கட்சித் தலைவர் சித்தார்த்தனுக்கு நேற்று கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன என்பதை அறிய முடிந்தது" என்று புளொட் கட்சியின் மற்றொரு மூத்த உறுப்பினர் எமக்கு தெரிவித்தார்.

வலிகாமம் மேற்கு பிரதேச சபைக்குரிய தலைமையை நியமிக்கும் வாய்ப்பு புளொட் அமைப்பிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கின்றமை குறித்து, புளொட் தலைவர் சித்தார்த்தனுடன் உரையாடிய சமயமும் தேர்தல் விடயத்தில் ஆர்வமில்லாதவர் போன்ற தொனியிலேயே அவரது பதில்கள் இருந்தமையை அவதானிக்க முடிந்தது. இதுகுறித்து அவருக்கு நெருக்கமான தரப்புக்களிடம் கேட்டபோது

"ஆம். நடக்கும் சம்பவங்கள் புளொட் தலமைக்கு வெறுப்பையும், அதிருப்தியையும் தந்துள்ளன. ஆனால் அதற்காக தேர்தல் சமயத்தில் கூட்டமைப்பின் ஐக்கியத்தை உடைக்கும் வேலையையோ அதனை பாதிக்கும் கைங்காரியத்தையோ செய்யும் எண்ணம் எதற்கும் கட்சித்தலைமை இணங்காது என்பது எமக்கு தெரியும்.

ஆனாலும் ஓரிரு உறுப்பினர்கள் பதவிகளுக்காக அவர்களுக்கு பின்னால் சுயமரியாதையின்றி இழுபடாமல், தேர்தலிலும், பிரசாரத்திலும் பங்குபற்றாமல் ஒதுங்கியிருந்து அரசியல் நாகரிகத்துடன் எதிர்ப்பைக் காட்டலாம் என்ற அழுத்தம் மூத்த உறுப்பினர்கள் பலராலும் கட்சித்தலமைக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

கட்சித்தலமை அவை குறித்து பரிசீலிக்கின்றது என்பதை மட்டுமே என்னால் இப்போதைக்குக் கூற முடியும் " - என்றார் அந்த பிரமுகர்.