கூட்டமைப்பிடம் கையேந்திய மகிந்த, ரணில்: மாவை போட்ட நிபந்தனை: சூடு பிடிக்கும் அரசியல் களம்!

Report Print Samaran Samaran in அரசியல்

கொழும்பு அரசியல்களம் குழப்பமாக உள்ளது. இந்த சமயத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் அறிவிக்க வேண்டிய அவசியமில்லை.

இரண்டு கட்சிகளும் பிரதமர் பதவிக்கு உரிமை கோருகிறார்கள். இரண்டு தரப்புமே தமிழ் தேசிய கூட்டமைப்புடன் பேசியும் இருக்கிறார்கள்.

ஆனால், தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளை நிறைவேற்றும் தரப்பையே எம்மால் ஆதரிக்க முடியும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா.

தற்போதைய அரசியல் குழப்பநிலை, தமிழ் தேசிய கூட்டமைப்பு எடுக்கவுள்ள முடிவுகள் குறித்து, தமிழரசுக்கட்சி தலைவரிடம் கருத்து கேட்டபோதே இதனை தெரிவித்தார்.

‘நேற்று நாங்கள் கொழும்பில் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தை நடத்தினோம்.

அப்போது எங்களிற்கு இப்படியொரு விடயம் நடக்கவிருந்தது தெரியவில்லை.

நான் நீர்கொழும்பை கடந்து வந்து கொண்டிருந்த போதுதான், செய்திகள் வரத் தொடங்கின.

நான் கொழும்பில் இல்லாத போதும், சம்பந்தன், சுமந்திரன், பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.

நேற்றிரவு ஐ.தே.க தரப்பிலிருந்தும், இன்று காலையில் மஹிந்த ராஜபக்ச தரப்பிலிருந்தும் பேசினார்கள். எமது நிலைப்பாடு என்னவென்பதைத்தான் இரண்டு தரப்பினரும் கேட்டறிந்தனர்.

எமது மக்கள் தந்த பல பொறுப்புக்கள் எம்மிடம் உள்ளன. இனப்பிரச்சனைக்கு தீர்வு- அரசியலமைப்பு உருவாக்க பணி முதன்மையானது. காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள் விவகாரங்களில் ஜனாதிபதி சில வாக்குறுதிகளை வழங்கி, அந்த பணிகள் நடந்து வருகின்றன.

இப்பொழுது திடீரென கொழும்பு அரசியல் குழப்பங்களினால் அந்த பணிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

அவற்றை நிறைவேற்றுவதுதான் எமக்குள்ள பிரதான கடமை. அந்த அடிப்படையிலேயே இயங்குவோம்.

இரண்டு தரப்புடனும் பேசுவேம். ஆனால், மஹிந்த ராஜபக்ச, இனப்பிரச்சனை தீர்வு முயற்சியில் எப்படி செயற்படுவார் என்ற சந்தேகமே எம்மிடம் உள்ளது.

ஆனாலும், அவசரப்படாமல் பொறுத்திருப்போம். கொழும்பு அரசியல் நிலைமை தெளிவடைந்த பின்னர் நாம் முடிவெடுக்கலாம்’ என்றார்.

Latest Offers