ஆளுமையற்ற வேலணை பிரதேச சபை: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!

Report Print Samaran Samaran in அரசியல்

வேலணைப் பிரதேச சபை ஆளுமை அற்ற சபையாக மாறிக்கொண்டு செல்கின்றது என்று சபை உறுப்பினர்கள் சிலர் சபையில் நேற்றுத் தெரிவித்தனர்.

வேலணைப் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு உப தவிசாளர் பொ.நடனசிகாமணி தலைமையில் சபை மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. அதன்போது ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

அவர்கள் மேலும் தெரிவித்ததாவது,

சபை ஆரம்பித்து ஏழு மாதங்கள் ஆகின்றன. சபையில் நிறைவேற்றப்பட்ட 50க்கும் அதிகமான தீர்மானங்கள் கிடப்பில் உள்ளன. அவற்றை நடைமுறைப்படுத்துவதாகத் தெரியவில்லை.

நாம் சபைக்கு வெறுமனே வந்து கதைத்துவிட்டுப் போவது போல உள்ளது. செய்யப்பட்ட சில செயற்றிட்டங்கள் கட்சிக்கு ஆதரவாகவும், தீர்மானத்துக்கு எதிராகவும் அமைந்துள்ளன.

கடந்த சபை அமர்வில் அனுமதியற்ற கடல் அட்டை பண்ணைகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பத்துக்கும் அதிகமான கடல் அட்டை பண்ணைகள் உள்ளன. அவற்றில் ஒன்று மட்டுமே சபை அனுமதி பெற்று நடைபெறுகிறது.

வேறு சில பண்ணைகளின் அனுமதி தொடர்பில் கட்சிஅலுவலகத்தில் சிபார்சு பெறுவதற்கான வேலைத்திட்டங்கள் நடைபெறுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தலா 11 தெரு மின் குமிழ்கள் வீதம் ஒதுக்கப்பட்டன. ஆனால் அவை தேவையின் நிமித்தம் உறுப்பினர்களின் சம்மதத்துடன் வேறு வட்டாரங்களுக்குப் பொருத்தப்பட்டன.

ஆனால் உறுப்பினர்கள் சிலரின் அனுமதி இல்லாமலும் அவர்களுக்கு வழங்கப்பட்ட மின் குமிழ்கள் எடுக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் நடைமுறைக்கு வருவதில்லை. இதனால் ஆளுமையற்ற சபையாக மாறி கொண்டிருக்கிறது. ஆகவே கட்சி சார்பாக செயற்படாமல் தீர்மானங்கள் நடைமுறைக்கு வர வேண்டும் – என்றனர்.