ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக பொறுப்பு அரசாங்கம் - புதிய பிரதமர் நாளை நியமிக்கப்படுவார்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய நெருக்கடி சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்திற்கு பதிலாக அனைத்து கட்சிகளின் இணக்கப்பாட்டுடன் பொறுப்பு அரசாங்கம் ஒன்றை நியமித்து அதன் கீழ் சில மாதங்களில் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. பொறுப்பு அரசாங்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரருக்கு வழங்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பு காரணமாக இந்த நெருக்கடி ஜனவரி மாதம் வரை நீடித்து செல்லும் என்பதால், தொடர்ந்தும் இழுத்தடிப்பு செய்ய முடியாது. மகிந்த ராஜபக்ச நாளைய தினம் விசேட உரை ஒன்றை நிகழ்த்தி, நிலைமையை மக்களுக்கு தெளிவுப்படுத்துவார் எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை மகிந்த ராஜபக்ச நாளைய தினம் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாகவும் அதன் பின்னர் ஜனாதிபதி புதிய பிரதமரை நியமிப்பார் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் இன்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இந்த முடிவுக்கு எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். தான் ராஜினாமா செய்யாமல் புதிய பிரதமரை நியமிக்க முடியாது என்பதால், ஜனாதிபதியை சிக்கலில் தள்ளாது, பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய மகிந்த ராஜபக்ச தீர்மானித்துள்ளதாகவும் அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.