காணிகள் விடுவிப்பில் இழுத்தடிப்பு! அரசியல் நாடகம் அரங்கேற்றம்!- மக்கள் கொந்தளிப்பு!

Report Print Yathu in வீடு காணி
67Shares

முல்லைத்தீவு மாவட்டத்தில் அரச மற்றும் தனியார் கணிகளில் 2012 இல் இருந்து இதுவரை 46.1 வீதமான காணி விடுவிக்கப்பட்டுள்ளன.

2256.9 ஏக்கர் காணிகள் இன்னும் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக அரச செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் படையினர் விடுவித்த காணிகளும், வசமுள்ள காணிகளும்

(ஏக்கர்)மொத்தம் விடுவிப்பு வசமுள்ளவை விகிதாசாரம்%

பிரதேச செயலகங்கள்
கரைதுறைப்பற்று 3470.0 1859.0 1611.0 53.6
புதுக்குடியிருப்பு 418.8 52.5 366.3 12.5
ஒட்டுசுட்டான் 154.0 9.0 145.0 5.8
துணுக்காய் 106.7 2.0 104.7 1.9
மாந்தை கிழக்கு 40.0 10.0 30.0 25.0
மொத்தம் 4189.4 1932.5 2256.9 46.1

முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான படையினர் மக்கள் காணிகள் மற்றும் அரச காணிகள் பொதுக்காணிகளில் நிலைகொண்டுள்ளார்கள்.

மாவட்டத்தில் 2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் படையினரால் மக்கள் வாழ் இடங்கள் கையகப்படுத்தப்பட்டு நிலைகொண்டுள்ளார்கள். 2012 ஆம் ஆண்டு முகாம்களில் இருந்த மக்கள் கட்டம் கட்டமாக மீள்குடியேற்றப்பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் மக்களின் காணிகளில் நிலைகொண்டுள்ள படையினர் கட்டம் கட்டமாக விலகி மக்களை முழுமையாக குடியேற்ற ஒத்துழைத்தாலும் பெருமளவான காணிகள் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சர்வதேசத்திற்கும் ஜக்கிய நாடுகள் சபைக்கும் படையினர் வசமுள்ள தமிழ் மக்களின் காணிகளை துரிதகதியில் விடுவிப்பதாக உறுதிமொழி அளித்திருந்த நிலையில் காணி விடுவிப்பு மந்தகதியில் நடைபெற்று வருவதாக மக்ககள் தெரிவிக்கின்றார்கள்.

“எங்கள் காணிகளை விடுவிக்காமல் இழுத்தடிப்பு செய்வதன் ஊடாக அரசு ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருப்பதாக தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரி கேப்பாபுலவில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆறுமுகம் வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.

கேப்பாபுலவு கிராமத்தில் 482 ஏக்கர் காணிகள் இன்னும் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வேலாயுதபிள்ளை தெரிவித்துள்ளார்.

எங்கள் மண்ணில் உள்ள நீர்வளம், நிலவளம், கடல் வளம் எல்லாவற்றையும் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து வருமானத்தை ஈட்டிக்கொள்கின்றார்கள். நாங்கள் பட்டிணியால் வாடுகின்றோம்.

குடும்பஸ்தரான வேலாயுதபிள்ளை தன் பிள்ளைகளின் தேவைக்காக தங்கள் சொந்த காணியினை பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் தங்கள் நிலங்கள் விடுவிக்கும் வரை போராடிக்கொண்டே இருப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.

வேலாயுதம்பிள்ளை போல கேப்பாபுலவில் 138 குடும்பங்களும், புதுக்குடியிருப்பிலும், வட்டுவாகல் பகுதியிலும், தங்கள் சொந்த நிலத்தை வேண்டி விடுவிக்க கோரி மக்கள் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மாவட்டத்தில் மக்களின் வாழ் இடங்களில் நிலைகொண்டுள்ள படையினர் கடந்த 8 ஆண்டுகளாக காணிகளில் உள்ள வளங்களை அபகரித்து அதிகளவான வருமானங்களை பெற்றுக்கொண்டு இருக்கின்றார்கள்.

புதுக்குடியிருப்பு பகுதியில் 20 குடும்பங்களுக்கு சொந்தமான 11 ஏக்கர் காணி படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது என காணி உரிமையாளர்களில் ஒருவரான தம்பிப்பிள்ளை (புனைபெயர்) தெரிவித்துள்ளார்.

இவர்களின் காணிகளில் உள்ள 150 வரையான தென்னை மரங்களில் இருந்து மாதம் தோறும் ஒரு இலட்சம் ரூபாவிற்கு தேங்காயினை பறித்து படையினர் தங்கள் கிராம வியாபாரிகளுக்கே விற்பனை செய்து வருகின்றார்கள் என்று காணி உரிமையாளர் தம்பிப்பிள்ளை கவலையுடன் தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் கடந்த மார்ச் மாதம் 4 ஆம் திதி இந்த மக்களுக்கு சொந்தமான 7.75 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மீதம் 11 ஏக்கர் காணிகள் மூன்று மாத காலத்திற்குள் விடுவிக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது.

ஆனால் இதுவரை 08 மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் இன்னும் எங்கள் காணிகள் விடுவிக்கப்படவில்லை. அதிகாரிகள் சொல்லும் வாக்குறுதிகளும் காற்றில் பறந்து விட்டன.

ஆனால் எங்கள் வாழிடத்தில் உள்ள வருமானங்களை படையினர் பறித்து தங்கள் தேவைகளுக்காக விற்பனை செய்து வருகின்றார்கள் என்று தம்பிப்பிள்ளை (புனைபெயர்) தெரிவித்துள்ளார்.

காணி விடுவிப்பு என்பது அரசின் அரசியல் நிகழ்ச்சியாக காணப்பட்டாலும், மக்களின் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையில் இன்றும் இந்த நாட்டில் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதன் உண்மையினை எடுத்துக்காட்டுகின்றது.