பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டிய இராணுவம் :சர்வதேச இந்துமத குருபீடம் கண்டனம்

Report Print Reeron Reeron in மதம்
பிள்ளையார் ஆலயத்தை உடைத்து பௌத்த விகாரை கட்டிய இராணுவம் :சர்வதேச இந்துமத குருபீடம் கண்டனம்

இந்துக்களின் புனித பூமியாக விளங்கும் வடக்கில் இந்து ஆலயத்தை உடைத்து அழித்து பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டுள்ளமையை சர்வதேச இந்து மத குருபீடத்தின் சார்பில் வன்மையாக கண்டிக்கின்றோம் என சர்வதேச இந்து மத குரு பீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பாக லங்காசிறி 24 சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியிலே மேற்கொண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

ஒவ்வொரு மனிதனும் தங்களின் மதங்களுக்குரிய ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டுவருகின்றமை வழமையான பண்டுதொட்டு வருகின்றது. அந்தவகையில் மதங்களுக்குள்ளே முரண்பாடான கருத்துக்களை மக்கள் மத்தியிலே திணிக்கின்றவகையிலே இன்று இலங்கை இராணுவத்தினரால் பல பௌத்த விகாரைகள் வடக்கில் அமைக்கப்பட்டு வருகின்ற செயலானது வேதனைக்குரியது.

விகாரைகள் அமைப்பது தவறது கிடையாது. அவரவருக்குரிய உரிய இடத்திலே ஆலயங்களை அமைத்துக்கொள்ளலாம்.

ஆனால் கடந்த யுத்த காலத்தில் இருந்து பாதுகாப்பு வலயமாக இருந்து தற்போது விடுவிக்கப்பட்ட வலி வடக்கு என்று சொல்லப்படுகின்ற காங்கேசன்துறைக்கு அண்மையிலே உள்ள வீமன்காமம் வடக்கிலுள்ள பிள்ளையார் (குமாரர்) ஆலயம் நீண்ட நாட்களாக பூசையின்றி குறித்த ஆலயம் சேதமடைந்திருந்த வேளை குறித்த ஆலயத்தை உடைத்து அவ்விடத்திலே ஒரு பௌத்த விகாரை ஒன்று கட்டப்பட்டிருப்பது இந்து மக்கள் மத்தியிலே ஒரு விசனத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.

குறித்த விடயத்தை உலகெங்கும் வாழும் இந்துக்களினால் பொறுத்துக் கொள்ளமுடியாது, காரணம் அங்கு இந்து வழிபாட்டிருற்குரிய விநாயகர் பெருமான் ஆலயமானது கடந்த முப்பது வருடமாக நடைபெற்ற யுத்தம் காரணமாக வழிபாட்டிற்கு செல்லமுடியாமல் இருந்து விடுவிற்க்கப்பட்ட தருனத்திலே அங்கு சென்று பார்க்கும்போது இராணுவத்தினரால் இந்து ஆலயம் அழிக்கப்பட்டு பௌத்த விகாரை ஒன்று அமைந்துள்ளமையானது வேதனைக்குரிய செயலாக பார்க்கின்றேன்.

புத்த பெருமானின் போதனையிலே அகிம்சையை போதித்தவர், எனவே பௌத்த மதத்தை ஏற்பவர்கள் அகிம்சை வழியில் தான் செல்லவேண்டுமென புத்த பெருமான் போதித்திருக்கின்றார். அதனை விடுத்து முற்றுமுழுதாக தமிழர்களாகிய இந்துக்கள் வாழும் புனித பூமியில் இந்துக்கள் வேதனைப்படும் அளவிற்கு இந்து ஆலயத்தை உடைத்து ஒரு பௌத்த விகாரை கட்டியிருப்பதனை சர்வதேச இந்துமத குருபீடத்தின் சார்பில் நாமும் அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.

குறித்த விடயத்திற்கு உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கின்றேன். இன்று கிளிநொச்சி மாவட்டத்தை எடுத்துக்கொண்டால் பத்துக்கு மேற்ப்பட்ட பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த காலத்தில் இந்து மற்றும் இஸ்லாமிய பள்ளி வாசல்கள் உடைக்கப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவங்களும் எமது நாட்டில் பதிவாகியுள்ளது.

அதனை விட இன்று கிழக்கு மாகாணத்திலும் தமிழ்ர்களின் எல்லைக் கிராமங்களில் பெரும்பான்மையினர் அத்துமீறி குடியேறி பௌத்த விகாரைகளை அமைத்துவருகின்றனர்.

அதன்படி மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலக பிரிவில் பௌத்த விகாரை அமைப்பதற்கு அரச அதிபர் அனுமதி அளித்திருப்பதாக அறியமுடிகின்றது. இவ்வாறான செயற்பாடுகளை கண்டிக்கின்றோம்.

நிலத்தில் ஏன் இவ்வாறான செயற்பாடுகளை நிறுவி இன மத ஒற்றுமையை சீர்குலைக்க முற்படுகின்றார்கள்.

முப்பது வருட கால யுத்தத்தில் பேரழிவுகளைச் சுமந்து ஆறாதவடுக்களாக இன்றும் தத்தழித்து தவிர்த்துக்கொண்டிருக்கும் எம் இந்து மக்களின் புனித பூமிகளில் இவ்வாறான பௌத்த விகாரைகள் அமைப்தென்பது வேதனைக்குரிய செயற்பாடாகும்.

வட கிழக்கில் அதிகமான நிலப்பரப்பில் பூர்வீகமாக தமிழர்களாகிய இந்துக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில் பௌத்தர்கள் இல்லை.

குறித்த விடயத்தை இந்து விவகார அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மற்றும் வடக்கு கிழக்கு முதலமைச்சர்கள், அரசியல்வாதிகள் போன்றவர்கள் கவனத்தில் எடுத்து விரைவாக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.

Comments