கிழக்கிலங்கையின் அரசி ஆடகசௌந்தரியின் கோட்டையில் வெகு கோலாகல திருவிழா!

Report Print Kumar in மதம்

இலங்கையில் வரலாற்று சிறப்புமிக்க முருகன் தலங்களில் ஒன்றாகவும் கிழக்கிலங்கையில் பிரசித்திபெற்றதுமான மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் இன்றைய தினம் காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

இலங்கையின் தென்கிழக்கினை ஆட்சிசெய்த ஆடகசௌந்தரி என்னும் அரசியினால் புனரமைப்பு செய்யப்பட்டு தலை நகராகக்கொண்டு ஆட்சி செய்யப்பட்டதாக கருதப்படும் தாந்தாமலை முருகன் ஆலயம் இலங்கை தமிழர்களின் வரலாற்றின் தடமாக காணப்படுகின்றது.

காடும் காடுசார்ந்த மலை பகுதியாகவும் உள்ள தாந்தாமலையில் சித்தர்கள் இன்றும் ஆட்சிசெய்வதாக இந்து மக்களினால் நம்பப்படுகின்றது.

பல்வேறு சிறப்புமிக்க தாந்தாமலை முருகன் ஆலயத்தின் கொடியேற்றத்திற்கு முன்பாக மலையில் கோயில் கொண்டுள்ள மலைப்பிள்ளையார் ஆலயத்தில் பிள்ளையாருக்கான கொடியேற்றம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இலங்கையிலேயே விசேட வடிவத்துடன் கொண்ட ஆலய மூலஸ்தானத்தில் மூலமூர்த்தியாகவுள்ள முருகப்பெருமானுக்கு பூஜைகள் நடைபெற்று கொடிச்சீலை ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த கொடியேற்றத்தில் கொடிச்சீலையுடன் நெற்கதிர்கள் கொடியாக இணைக்கப்பட்டு கொடியேற்றம் நடத்தப்பட்டமை ஆலயத்தின் பழமையாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் இருபத்தொரு நாட்கள் இரவு திருவிழாக்கள் அலங்கார சிறப்பு ஆராதனைகளுடன் நடைபெறவுள்ளன.

இந்த உற்சவங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதி மக்களின் பங்களிப்புடன் நடாத்தப்படுகின்றமை சிறப்பம்சமாகும்.

ஆலயத்தின் தீர்த்த உற்சவமானது எதிர்வரும் 28ஆம் திகதி சனிக்கிழமை ஆடகசௌந்தரியினால் கட்டப்பட்ட தீர்த்தக்கேணியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.