பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் ஆடிவேல் தேர்த்திருவிழா

Report Print Kumar in மதம்

கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற முருகன் ஆலயங்களுள் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயத்தின் ஆடிவேல் தேர்த்திருவிழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் எல்லையாக விளங்கும், இரண்டு பக்கங்களினாலும் நீரினாலும் சூழப்பட்ட பெரியகல்லாறு எனும் பதியில் நீண்டகாலமாக முருகப்பெருமான் சிவசுப்ரமணியராக அருளாட்சி செய்துவருகின்றார்.

கடந்த புதன்கிழமை ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்றுவந்தது.

வருடாந்த மஹோற்சவத்தில் தினமும் தம்பபூஜை, வசந்த மண்டப பூஜை, அபிசேகம், யாகம் மற்றும் சுவாமி உள்வீதியுலா, வெளிவீதியுலா என்பன நடைபெற்றுவந்தன.

இன்று காலை விசேட யாக, அபிசேக ஆராதனைகள் நடைபெற்ற நிலையில் தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை நடைபெற்று, வள்ளிதெய்வானை சமேதரராக ஆறுமுக சுவாமி தேர் மீதேறி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

கதிர்காமக்கந்தனின் தீர்த்தோற்சவத்திற்கு செல்லமுடியாத பக்தர்களுக்கு கதிர்காம கந்தனாக நின்று தீர்த்தோற்சவத்தினை காட்டிவரும் ஆலயமாகவும் இந்த ஆலயம் விளங்கிவருகின்றது.

மஹோற்சவமானது பத்து தினங்கள் நடைபெற்றுவந்த நிலையில் நாளை காலை ஆடிவேல் தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.