புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள்

Report Print Akkash in மதம்

புனித வெள்ளியை முன்னிட்டு உலகளாவிய ரீதியில் பல்வேறு கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறவுள்ளன.

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்ததை நினைவுகூறும் வகையில், கிறிஸ்தவர்கள் தவக்காலம் கடைபிடிக்கின்றனர்.

லெந்து நாட்களின் கடைசி வெள்ளிக்கிழமையை, இயேசு கிறிஸ்துவை சிலுவையில் அறைந்து அவர் மரித்த நாளாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.

உலகம் எங்கும் உள்ள கிறிஸ்தவர்கள் இயேசு மரித்த நாளை புனித வெள்ளி தினமாக அனுஷ்டிக்கிறார்கள். அவர் இறந்து மூன்றாவது நாள் மீண்டும் உயிர்த்தெழுந்தார்.

இதனைதான் ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுகின்றனர். இந்த விழாவுக்கு தயாராகும் முன்பு அவர்கள் 40 நாட்கள் நோன்பிருந்து பிரார்த்தனை செய்வார்கள்.

இந்த நாட்களில் வரும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இயேசுவின் இறப்பை சித்தரிக்கும் சிலுவை பாடு நிகழ்ச்சி ஆலயங்களில் நடைபெறும். அவர் உயிர் நீத்த வெள்ளிக்கிழமையே புனித வெள்ளி என்று அழைக்கப்படும்.

இன்று முழுவதும் கிறிஸ்தவர்கள் ஒரு வேளை உணவு மட்டும் அருந்தி தவம் இருப்பர். இன்று இரவுடன் கிறிஸ்தவர்களின் தவக்காலம் முடிவுக்கு வரும்.

சனிக்கிழமை நள்ளிரவு 11 மணிக்கு மேல் ஈஸ்டர் கொண்டாட்டங்கள் தொடங்கும். மரித்த இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சிகள் நடைபெறும். இதனை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிராத்தனைகளும் நடைபெறும்.