இந்துக்களாக பிறந்த பெண்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்

Report Print Sinan in மதம்

பெண்கள் அனைவரும் தங்கள் கணவருக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், தீர்க்கசுமங்கலிங்களாக வாழும் விதத்திலும் வரலட்சுமி விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.

இந்த விரதம் திருமணம் ஆன சுமங்கலிப் பெண்களுக்கு தீர்க்க சுமங்கலி வரத்தையும், திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு நல்ல வரனையும் நல்கும் என்பது நம்பிக்கையாகும்.

மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என அஷ்டலட்சுமிகளாகப் பிரித்துள்ளனர்.

எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் அவள். லட்சுமிதேவி பொறுமை மிக்கவள். அவள் அனைவருக்கும் நன்மையே செய்வாள் என அதர்வண வேதத்தில் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பெண்களுக்கு ஒரு கஷ்டம் என்றால் அவளால் பொறுத்துக் கொள்ள முடியாது. அவள் நித்திய சுமங்கலி. மஞ்சள் பட்டு உடுத்தி காட்சி தருபவள்.

கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள். பெண்களுக்கே உரித்தான கருணை உள்ளம், அழகு, வெட்கம், அன்பு, புத்தி ஆகியவற்றிற்கு அதிபதியும் அவளே.

வரலட்சுமி விரதம் இருப்பதால் பல பலன்கள் ஏற்படும். சித்திரநேமி என்ற தேவகுலப் பெண் நீதிபதியாக இருந்தாள். அவள் தேவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளுக்கு நடுவராக இருந்து தீர்ப்பு வழங்குவாள்.

ஒருமுறை அவள் பாரபட்சமாக நடந்து கொண்டதால் அன்னை பார்வதி அவளை குஷ்டரோகியாகும் படி சாபம் கொடுத்தாள். சித்திரநேமி சாபவிமோசனம் கேட்டு பார்வதியின் காலில் விழுந்தாள்.

வரலட்சுமி விரதத்தை கடைபிடித்தால் நோய் நீங்கும் என பார்வதி அருள் செய்தாள். அவள் பூலோகம் வந்து, ஒரு குளக்கரையில் அமர்ந்து வரலட்சுமி பூஜை செய்து சாபம் நீங்கப் பெற்றாள்.

புண்ணிய நதிகளில் தீர்த்தமாடுவது, வரலட்சுமி விரதம் இருந்ததற்கு ஒப்பானதாகும். குறிப்பாக கங்கை, சரஸ்வதி, நர்மதை, கோதாவரி, காவிரி, தாமிரபரணி ஆகிய புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால் காலம் முழுவதும் வரலட்சுமி விரதம் இருந்த பலன் கிடைக்கும்.

பெண்கள் புண்ணிய நதிகளில் தீர்த்தமாடியும் வரலாம். மாமனார் மற்றும் மாமியாருக்கு பணிவிடை செய்யும் மருமகள்களுக்கும், வரலட்சுமி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

மட்டக்களப்பு

வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் வரலஷ்மி விரதத்தினை முன்னிட்டு இன்று திருவிளக்கு பூஜை நடாத்தப்பட்டுள்ளது.

வரலஷ்மி விரதத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் இன்று மாலை விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.

இதன்போது புஜைகளை தொடர்ந்து விரதம் அனுஸ்டித்தவர்களுக்கு வரலஷ்மி காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு

கொழும்பு -11 செட்டியார் வீதி ஸ்ரீ உத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வரலஷ்மி விரதத்தினை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது புஜைகளை தொடர்ந்து விரதம் அனுஸ்டித்தவர்களுக்கு வரலஷ்மி காப்பு கட்டும் நிகழ்வு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல் - குமார்,ஆகாஸ்