இலங்கையின் பல பகுதிகளிலும் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம்

Report Print Thirumal Thirumal in மதம்

இந்து மக்கள் அனைவரும் இன்றைய தினம் அவர்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

இலங்கையில் இந்துக்கள் வசித்து வரும் பல பகுதிகளிலும் இப்பண்டிகை மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. நாட்டின் பல பகுதிகளிலும் தீபாவளி பண்டிகை களைகட்டியுள்ளது.

இப்பண்டிகையை முன்னிட்டு இன்று இந்து ஆலயங்களில் விசேட பூஜைகள் நடைபெற்றுவருகின்றன.

மன்னார்

தீப ஒளி திருநாளை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தில் உள்ள இந்து மக்கள் அனைவரும் தீப ஒளி திருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதுடன் மாவட்ட ரீதியாக உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் தீர்த்த அபிசேகங்களும் இடம் பெற்றன.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தின் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வர ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் இடம் பெற்றதுடன் விசேட ஆராதனைகளும் இடம் பெற்றன

குறித்த விசேட பூஜை வழிபாட்டின் பின்னர் பக்தர்களுக்கான ஆசி நிகழ்வும் இடம் பெற்றது.

அதே நேரத்தில் கேதார கௌரி விரதத்தில் 21 நாட்கள் ஈடுபட்ட அனைவரும் இன்றைய தினம் காப்பு கட்டி தங்களுடைய வழிபாடுகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள் - ஆஷிக்


அம்பாறை

அம்பாறை மாவட்டத்தில் தமிழர்தம் தீபாவளித்திருநாள் மழையுடன் கொண்டாடப்பட்டது. அதிகாலைமுதல் மழை பொழிந்து கொண்டிருந்தது. ஆலயங்களில் நேரத்திற்கு தீபாவளி விசேடபூஜைகள் நடாத்தப்பட்டன.

மழை காரணமாக மக்கள் வழமைக்குமாறாக குறைவாக காணப்பட்டனர். எனினும் மழை சற்றுதணிந்ததும் புத்தாடைபுனைந்து ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டார்கள்.

பட்டாசு வாணவேடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறவில்லை. மைதானங்களில் இடம்பெறவிருந்த பல விளையாட்டு நிகழ்ச்சிகள் மைதானத்தில் தேங்கி நின்ற வெள்ளம் காரணமாக நடாத்தப்படவில்லை.

செய்தி - சகாதேவராஜா

மலையகம்

மலையக மக்கள் சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தீபாவளி பண்டிகையை கொண்டாடுகின்றனர்.

ஹட்டன் பகுதியில் ஹட்டன் அருள் மிகு ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் பிரதான குருக்கள் ஸ்ரீ பூர்ணசந்திராநந்த குருக்கள் தலைமையில் தீபாவளி விசேட சமய வழிபாடுகள் நடைபெற்றன.

விசேட பூஜை வழிபாடுகளில் ஆலய பரிபாலன சபையினர் உட்பட பொது மக்களும் இவ்வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு மலையகத்தில் பல ஆலயங்களில் தீபாவளி விசேட வழிபாடுகள் இடம்பெற்றன

இந்த பூஜை வழிபாடுகளில் ஏராளமான இந்துக்கள் நீராடி புத்தாடை அணிந்து பூஜைகளில் கலந்துகொண்டதுடன் சிறுவர்கள் புத்தாடை அணிந்து பட்டாசு கொளுத்தி மிகவும் மகிழ்ச்சிகரமாக மலையகப்பகுதியில் கொண்டாடிவருகின்றனர்.

தீபாவளி திருநாளினை முன்னிட்டு வீடுகளில் நேற்று இரவு இறந்தவர்களுக்கு படையல் பிதிர்கடன் செய்ததுடன் விசேட லக்சுமி பூஜைகளும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு

மட்டக்களப்பில் தீபாவளிப் பண்டிகையை மக்கள் சிறப்பாக கொண்டாடிவருகின்றனர்.

கடும் மழைக்கு மத்தியிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் இன்று காலை தீபத்திருநாள் பூஜைகள் சிறப்பாக நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபத்திருநாளை முன்னிட்டு விசேட பூஜைகள் நடைபெற்றன.

ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ ஆதி சௌந்தரராஜ குருக்கள் தலைமையில் நடைபெற்ற இந்த விசேட பூஜையில் ஆலய வண்ணக்கர்கள்,பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது நாட்டில் நீடித்த சாந்தியும் சமாதானமும் நிலவவும் நாட்டில் இருள் நீங்க ஒளி வீசவும் பிரார்த்தனைகளும் செய்யப்பட்டன.

செய்தி மற்றும் படங்கள் - குமார்