வரலாற்றுச் சிறப்புமிக்க பொலன்னறுவை சிவாலயத்தில் நடைபெற்ற சிவராத்திரி

Report Print Sinan in மதம்
1055Shares

பொலன்னறுவை வானவன் மாதேவி ஈஸ்வரத்தில் மகா சிவராத்திரி பெருவிழாவை முன்னிட்டு விசேட வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

உலகெங்கும் வாழும் இந்து மக்கள் இன்றைய தினம் மகா சிவராத்திரி பெருவிழாவை கொண்டாடுகின்றனர்.

அதனை முன்னிட்டு இலங்கையின் இரண்டாவது சிவாலயமான பொலன்னறுவை வானவன் மாதேவி ஈஸ்வரத்தில், அகில இலங்கை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் விசேட பூஜை வழிபாடுகள் இன்று நடைபெற்றன.

இதில் ஆயிரக்கணக்கான சிவபக்தர்களும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கலந்து கொண்டதுடன் அயற்கிராமங்களான மன்னம்பிட்டி, சமன்பிட்டி, முத்துக்கல், கறப்பளை, செவனப்பிட்டி போன்ற பிரதேச அறநெறி பாடசாலை மாணவர்கள், மக்கள் கலந்து கொண்டமை மிகவும் சிறப்பான விடயமாகும்.

வரலாற்றுச் சிறப்புமிக்க வானவன் மாதேவி ஈஸ்வரம் இலங்கையின் பண்டைய தலைநகரங்களுள் ஒன்றான பொலன்னறுவையில் அமைந்துள்ளது.

11 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் கட்டப்பட்ட இவ் ஆலயம் இலங்கையில் உள்ள பழமை வாய்ந்த சிவாலயங்களில் ஒன்றாகும்.

இலங்கையை சோழ மன்னனான ராஜ ராஜ சோழன் ஆட்சி செய்யும் போது இவ்வாலயம் அமைக்கப்பட்டிருக்கலாமென நம்பப்படுகிறது.

மிகவும் நுட்பமான முறையில் அழுத்தமாக கற்களில் எழுதப்பட்டிருக்கும் இவ்வாலய வேலைப்பாடுகள், சோழர்களின் கட்டட கலை மற்றும் மரபுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பம்சமாகும்.

அகழ்வாராய்ச்சியில் கண்டறியப்பட்ட 16 இற்கும் மேற்பட்ட ஆலயங்களில் தற்பொழுது ஓரளவுக்கு சிறந்த நிலையில் காணப்படும் இரண்டாவது சிவாலயமாகும்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் பூரணமான அனுசரணையுடன் இச் சிவாலயத்தில் சிவராத்திரி உள்ளிட்ட பூஜைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இவ் ஆலயத்திற்கு இன,மத வேறுபாடுகளை கடந்து நாள்தோறும் பல்வேறு மக்களும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் வருகை தருவது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.