மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் நடைபெறும் செல்வச்சந்நிதி தேர்!

Report Print Rakesh in மதம்
165Shares

யாழ்ப்பாணம், வடமராட்சி - தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் இடம்பெறவுள்ளது.

வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலய மஹோற்சவம், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி சிறப்பாக இடம்பெற்று வரும் நிலையில், செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி தேர்த்திருவிழா இடம்பெறவுள்ளது.

ஆலயத்துக்கு வருகைதரும் பக்தர்கள், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, சமூக இடைவெளியைப் பேணுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பக்தர்களைப் பாதுகாக்கும் வகையில், இந்தக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் நிலையில், வடமராட்சி வடக்கு பருத்தித்துறை பிரதேச செயலகம் உற்சவ காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார வழிகாட்டுதல்கள் தொடர்பில் தெளிவுபடுத்தியுள்ளது.

அந்தவகையில் சுகாதாரத்துறையினரின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் உற்சவ காலத்தில் 150 அடியவர்கள் மாத்திரம் வழிபாடு செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள். அடியவர்கள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணத்தை எடுத்து வருதல் கட்டாயமானதாகும்.

இவை வீதித் தடைகளில் ஒவ்வொரு தடவையும் பதிவு செய்யப்படும். முகக்கவசங்களை அணிந்திருந்தல் கட்டாயமானதாகும். சமூக இடைவெளியை அடியவர்கள் பின்பற்ற வேண்டும்.

கட்டாயத் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டவர்கள், சுய தனிமைப்படுத்தப்பட்டவர்கள் ஆகியோர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான ஆவணத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும். காய்ச்சல், தடிமன், தும்மல், இருமல் உள்ளவர்கள் ஆலயத்துக்கு வருவதைத் தவிர்க்க வேண்டும்.

தாகசாந்தி, அன்னதானம் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அங்கப்பிரதட்சணம், அடி அழித்தல், கற்பூர சட்டி எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

திருவிழாக் காலங்களில் இடம்பெறும் திருமண நிகழ்வுகளின் போது 20 நபர்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்படும். விசேட போக்குவரத்துச் சேவை இம்முறை இடம்பெறமாட்டாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.