நாசா நிறுவனம் வெளியிட்ட நற்செய்தி!

Report Print Samy in விஞ்ஞானம்

ஓசோன் லேயர்ல ஓட்டையப் போட்டுட்டாங்களாமா!” - எண்பதுகளின் இறுதியில் பிறந்தவர்கள் தங்கள் பள்ளிப்பருவங்களில் இந்தச் செய்தியை விளையாட்டாகக் கடந்திருப்பார்கள்.

கொஞ்சம் ஆர்வமுள்ளவர்கள், அது என்ன ‘ஓசோன் லேயர் (படலம்)’ என்று தெரிந்து கொள்ள முயற்சி செய்திருப்பார்கள்.

“அதுதான்டா நம்ம பூமிய சூரிய வெப்பத்துல இருந்து காப்பாத்துது” என்று சொல்லி விட்டு பள்ளிக்கூட சீனியர்கள் பெருமிதத்தில் பூத்திருப்பார்கள்.

ஓசோன் படலம் இல்லாவிட்டால் பூமி அழிந்து விடும், சூரியனின் புற ஊதாக் கதிர்கள், உயிர்களின் சுவடில்லாமல் செய்து விடும் என்பது மட்டும் நமக்கு அப்போது புரிந்திருக்கும்.

சரி, இது எந்தளவிற்கு உண்மை? தற்போது இந்த ஓசோன் படலத்தின் நிலை என்ன?

மூன்று ஒக்சிஜன் மூலக்கூறுகளால் (O3) ஆனது இந்த ஓசோன் எனப்படும் கனிம மூலக்கூறு. வெளிர் நீல வண்ணத்தில் இருக்கும் இந்த வாயு குளோரின் போல ஒருவித எரிச்சலூட்டும் நெடியைக் கொண்டது.

வளி மண்டலத்தில் இருக்கும் ஒக்சிஜன் (O2) மூலக்கூறுகளுடன், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் சேரும் போதும், வளி மண்டலத்தில் மின்சார வெளியேற்றங்கள் நிகழும் போதும் இந்த வாயு உருவாகிறது.

இதுவே சூரியனின் புற ஊதாக் கதிர்களை பூமிக்குக் கடத்தாமல் தடுக்கிறது. இது வளி மண்டலம் முழுவதும் ஆங்காங்கே சிறிய அளவில் சிதறிக் கிடந்தாலும், பூமியின் படை மண்டலத்தில் தான் (Stratosphere) அதிகமாகக் காணப்படுகிறது. இதைத்தான் நாம் ஓசோன் படலம் என்கிறோம்.

இந்த ஓசோன் பிரச்சினை தொடங்கியது 1980-களில்தான். அப்போதுதான் இந்தப் படலத்தில் உருவாகியிருந்த துளை கண்டறியப்பட்டது. இந்தத் துளையானது சூரியனின் புற ஊதாக் கதிர்களைத் தடுக்காமல் உள்ளே அனுமதிக்கும் தன்மையுடையது.

இந்தக் கதிர்களால் தோல் புற்றுநோய், கண்புரை, நோய் எதிர்ப்பு அமைப்புகள் பலவீனமடைவது மற்றும் தாவரங்கள் பாதிக்கப்படுவது என எண்ணற்ற தீங்குகளைப் பூமிக்கு ஏற்படுத்தும்.

இந்தத் துளை கண்டுபிடிக்கப்பட்ட இரண்டு வருடங்களிலேயே பிரச்சினையை சமாளிக்க மாண்ட்ரீயல் நெறிமுறை (Montreal Protocol) என்ற ஒன்றை உலக நாடுகள் கொண்டு வந்தன.

இதன்படி, ஓசோன் படலத்தை சிதைக்கும் இரசாயனங்களில் முக்கியமான ஒன்றான குளோரோ ஃப்ளோரோ கார்பன் (Chlorofluorocarbon - CFC) வெளியிடும் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. சிறிது சிறிதாக அதன் பயன்பாட்டினை அனைவரும் குறைத்துக் கொள்ள வேண்டுமென முடிவு எடுக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாகவுள்ள நாடுகளுடன் சேர்த்து மொத்தம் 197 நாடுகள் இந்த நெறிமுறையை ஏற்றுக்கொண்டன.

இந்த நெறிமுறை கொண்டு வரப்பட்டுக் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளான நிலையில், ஓசோன் துளையின் தற்போதைய நிலை என்ன என்பது ஒரு விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வந்தது.

காரணம், ஓசோன் துளையில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்படவில்லை, அல்லது முறையாக அதைக் கண்டறிய முடியவில்லை.

இந்நிலையில் நாசாவின் Aura செயற்கைக்கோள் தரவுகளை கொண்டு நாசாவின் கோடார்ட் விண்வெளி விமான மையத்தை (NASA’s Goddard Space Flight Center) சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் சில தகவல்களை Geophysical Research Letters தளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

இதன்படி, கடந்த சில வருடங்களில், ஓசோன் துளை சற்று சுருங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முதன்மை ஆராய்ச்சியாளரான சூசன் ஸ்ட்ரஹன் இது குறித்துப் பேசுகையில்,

“இது குறித்து நாம் இதுவரை ஆராய்ச்சி செய்யவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது, தரவுகள் அனைத்துமே நம் கண் முன்னேதான் இருக்கின்றன. அதைச் சரியாகக் கண்டறிந்து முறையாகப் பயன்படுத்தினாலே போதும்” என்றார்.

சூசன் மற்றும் அவரது சக ஆராய்ச்சியாளரான ஆன் டக்ளஸ் இருவரும் இணைந்து ஓசோன் படலத்தின் மாற்றங்களை அலசியிருக்கிறார்கள். இதற்காக இவர்கள் 2005 முதல் 2016 வரையான தரவுகளை ஆய்வு செய்துள்ளனர்.

இந்தக் குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டும் ஓசோன் படலத்தின் சிதைவு 20 சதவிகிதம் சரியாகியுள்ளது. இதை உறுதி செய்த பின், ஒவ்வொரு குளிர்காலம் முடிந்த பின்னும், படைமண்டலத்தில் இருக்கும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் அளவுகள் குறித்து ஆய்வு செய்துள்ளனர்.

காரணம், ஓசோன் படலத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் இந்த அமிலம் படலத்தில் சேர மிக முக்கியக் காரணம் நாம் பயன்படுத்தும் குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள்தாம். மாண்ட்ரீயல் நெறிமுறை கொண்டு வந்த போது எதிர்பார்க்கப்பட்டது போலவே ஓசோன் படலத்தில் குளோரின்களின் ஆதிக்கம் வெகுவாகக் குறைந்திருக்கிறது.

தோராயமாக 0.8 சதவிகிதம் குளோரின் வருடா வருடம் காணாமல் போயிருக்கிறது. இதன் மூலம், ஓசோன் படலத்தின் தன்மையை நேரடியாகப் பாதிப்பது குளோரோ ஃப்ளோரோ கார்பன்கள்தாம் என்று மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

இந்தக் குறைவு என்பது மாண்ட்ரீயல் நெறிமுறை கொண்டுவந்த பிறகே நடந்துள்ளது என்பதால் இந்தக் கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நெறிமுறையின் கோட்பாட்டின்படியே உலக நாடுகள் செயல்பட்டால் 2060-ம் ஆண்டிலிருந்து 2080-ம் ஆண்டிற்குள் ஓசோன் துளை முழுமையாக மறைந்துவிடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

உலக அரங்கில், சுற்றுச்சூழல் மற்றும் தட்பவெப்பம் குறித்து வெகு நாள்களுக்குப் பிறகு வந்த நல்ல செய்தி இதுதான்.

இது நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம் ஒன்றுதான். எந்த ஒரு பிரச்சினை என்றாலும், அதன் அறிவியலை உணர்ந்து, அதற்கு ஏற்றவாறு கொள்கைகளை தகவமைத்து அதை உலகம் முழுவதும் நிறுவினால், நிச்சயம் சில ஆண்டுகளில் அதற்குப் பலன் கிடைக்கும்.

- Vikatan