கிளிநொச்சியில் சுமார் 12 கிலோ கேரளா கஞ்சா மீட்பு! இருவர் கைது

Report Print Kumar in பாதுகாப்பு

கிளிநொச்சியில் மதுவரித்திணைக்களத்தினால் இரண்டு தினங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட புலனாய்வு நடவடிக்கையின்போது சுமார் 12 கிலோ கேரளா கஞ்சாவினைக்கைப்பற்றியுள்ளதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

வடமாகாணத்திற்கு எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் மேற்கொள்ளவுள்ளதால் வட பகுதியில் போதைப்பொருள் பாவனையினை ஒழிக்கும் வகையில் மதுவரித்திணைக்களத்தின் விசேட புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளரின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தலைமையில் இந்த குழு அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தலைமையில் மதுவரித்திணைக்களத்தின் பரிசோதகர்களான வி.செல்வகுமார், வி.காண்டீபன், ஜெயானந்தா, மதுவரித்திணைக்கள சாஜன்ட் ஜனாநந்தா, உத்தியோகத்தர்களான குகனேசன், அஜித், ரஜனிக்காந்த் ஆகியோர் கொண்ட குழுவே இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுவின் நடவடிக்கைகளில் நேற்று புதன்கிழமை கிளிநொச்சி மாவட்டத்தின் கிளாளி பகுதியில் மோட்டார் சைக்கிளில் கொண்டுசெல்லப்பட்ட நான்கு கிலோவும் 150 கிராம் எடையுடைய கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் மோட்டார் சைக்கிளும் மீட்கப்பட்டதாக மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

அதேபோன்று இன்று வியாழக்கிழமை அதிகாலை இயக்கச்சியில் வைத்து 08 கிலோ 150 கிராம் கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சுசாதரன் தெரிவித்தார்.

இருவரும் இன்று வியாழக்கிழமை கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பிலான நடவடிக்கைகள் வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்திற்கான மதுவரித்திணைக்கள அத்தியட்சர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

Latest Offers

loading...

Comments