கடந்த ஆட்சியின் போது வடக்கின் வசந்தம் மற்றும் ஊவா உதயம் ஆகிய திட்டங்களின் போது நடந்த முறைகேடுகளுடன் தொடர்புடைய இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
ஓய்வுப் பெற்ற உயர் அதிகாரி டீ.வி.எஸ்.கே.பொன்சேகாவை தலைமையிலான குழு இது குறித்து விசாரணை செய்யும் என மின்சார சபை அறிவித்துள்ளது.
இந்த நிலையில் விசாரணைகள் இன்னும் பூர்த்தியடையாத நிலையில், விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுப் பெற்ற உயர் அதிகாரி டீ.வி.எஸ்.கே.பொன்சேகாவிற்கு 3 மாதகால பதவி நீடிப்பு வழங்கப்பட்டுள்ளதாக மின்சார சபை உயர் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
வடக்கின் வசந்தம் திட்டத்தின் இரண்டு முகாமையாளர்கள் தொடர்பிலான விசாரணைகள் நிறைவடையாமையினாலேயே டீ.வி.எஸ்.கே.பொன்சேகாவை நியமித்துள்ளதாக மின்சார சபை பணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வடக்கின் வசந்தம் மற்றும் ஊவா உதயம் ஆகிய திட்டங்களின் போது 400 மில்லியன் ரூபா மோசடி இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களின் மோசடி விபரம் அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினால், இந்த விசாரணைகளை மேற்கொள்ளவுள்ள டீ.வி.எஸ்.கே.பொன்சேகாவின் பதவி காலம் நீடிக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என இலங்கை மின்சார சபையின் தலைவருக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினரின் உதவியுடன் வடக்கின் வசந்தம் மற்றும் ஊவா உதயம் ஆகிய திட்டங்கள் மூலம் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்க தொழிற்சங்க ஊடகங்களின் தலையீடு இன்றி விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.