மக்களின் காவலர்கள்! அவர்கள் நீதியின் காவலர்கள்!

Report Print Samy in பாதுகாப்பு

பொலிஸ் துறை மீது மக்கள் கொண்டுள்ள அவநம்பிக்கை இன்று நேற்றுத் தோன்றியதல்ல.

பொலிஸ் திணைக்களத்தில் காலங்காலமாக எத்தனை​யோ சீரமைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், இந்தத் துறையை முழுமையாகத் தூய்மைப்படுத்துவதென்பது முடியாத காரியமாகவே இருக்கிறது.

பொலிஸ் துறையில் நேர்மையும் கடமையுணர்வும் கொண்ட பொலிஸார் ஏராளமானோர் பணியாற்றுகின்றனர்.

ஆனால் அங்குள்ள ஊழல் பேர்வழிகளின் செயற்பாடுகள் காரணமாக இத்திணைக்களத்தின் களங்கத்தை இன்னமும் முழுமையாக துடைக்க முடியாமலேயே உள்ளது.

பொலிஸார் சிலரால் இழைக்கப்படுகின்ற குற்றச்செயல்கள் தொடர்பாக ஊடகங்களில் அவ்வப்போது செய்திகள் வந்தபடியே உள்ளன.

கடந்த கால ஆட்சியில் தலைவிரித்தாடிய பொலிஸ் அராஜகங்கள் இன்றைய ஆட்சிக் காலத்தில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், முறைகேடுகள் ஆங்காங்கே குறைந்தளவிலாவது இடம்பெற்றுக் கொண்டேயிருக்கின்றன.

பொலிஸ் துறையில் கடமையாற்றுவோரால் இழைக்கப்படும் சட்டமீறல்களுக்கு இரண்டு பிரதான காரணங்கள் உள்ளன. ஏராளமான முறைகேடுகளுக்கு பணமே காரணமாக அமைந்து விடுகின்றது.

சிறுதொகை முதல் பெருந்தொகை வரை லஞ்சத்தைப் பெறுவதற்காக குற்றத்தை இழைப்பதற்கும், நடந்து முடிந்த குற்றங்களை மூடி மறைப்பதற்கும் உத்தியோகத்தர்கள் முற்படும் போதுதான் நீதி புதைக்கப்பட்டு அநீதி வெளிக்கிளம்புகின்றது.

பொலிஸ் திணைக்களத்தில் லஞ்சம் கூடுதலாகப் பரிமாறப்படும் இடமாக போக்குவரத்துப் பொலிஸ் பிரிவு உள்ளது.

வாகன சாரதிகள் கூறுகின்ற தகவல்களையும் பத்திரிகைச் செய்திகளையும் வைத்துப் பார்க்கின்ற போது, இவ்விடயத்தை நிராகரிக்க முடியாதிருக்கிறது.

இவ்வாறான முறைகேடுகளே நாட்டில் குற்றச்செயல்களை மென்மேலும் வளர்த்தெடுக்கின்றன.

குற்றங்களை மூடி மறைப்பதற்கு அதிகார பலமுள்ளோர் ஆயத்தமாக உள்ள போது, குற்றவாளிகள் மேலும் தூண்டப்படுகின்றனர். குற்றங்களும் பெருகுகின்றன.

நாட்டில் நீதி தவறிய அரசாங்கமொன்று ஆட்சி நடத்தும் போது, குற்றவாளிகளின் காவலனாக பொலிஸார் மாறி விடுகின்றனர்.

முன்னைய ஆட்சிக் காலத்தின் போது நடந்தது இதுதான். அன்றைய நெறி தவறிய நடைமுறைகளை இன்னும்தான் முழுமையாக அகற்றிக் கொள்ள முடியாதிருக்கிறது.

முப்பது வருட கால யுத்தமும் இதற்கொரு காரணம் எனலாம்.

கடந்த கால ஆட்சியின் போது புலிகளை அழித்தொழிப்பதிலும், நாட்டைப் பாதுகாப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டதே தவிர, ஏனைய அநீதிக்குப் புறம்பான விடயங்களை அரசு பொருட்படுத்தவில்லை.

அரசாங்கத்தின் அனுசரணை பெற்றவர்கள் எந்தவொரு அராஜகத்திலும் ஈடுபட முடியுமென்பது இலங்கையில் அந்நாளில் எழுதப்படாத சட்டமாக இருந்தது.

பொலிஸ் துறையில் நிலவிய முறைகேட்டின் எச்சங்கள் இன்னுமே சிறிதளவில் இருந்து கொண்டுதானிருக்கின்றன.

அவற்றை அகற்றாத வரை பொலிஸ்துறை மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கட்டியெழும்புவது சிரமமாகவே இருக்கும்.

புஸல்லாவை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நடராஜா ரவிச்சந்திரன் என்ற இளைஞன் மரணமடைந்த சம்பவமானது சில தினங்களுக்கு முன்னர் அப்பிரதேசத்தில் பெரும் பதற்றமான சூழலொன்றை ஏற்படுத்தியிருந்தமை நினைவிருக்கலாம்.

குற்றச்செயலொன்று தொடர்பான சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வேளையில் இவ்வாலிபர் மரணமடைந்துள்ளார்.

இவ்விளைஞர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் தரப்பு கூறுகின்றது. ஆனாலும் அப்பிரதேச மக்கள் இதனை ஒப்புக் கொள்வதாக இல்லை.

மரணத்துக்கான காரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதன் காரணமாக அப்பிரதேசமே பெரும் பதற்றத்தில் மூழ்கியிருந்தது.

அவ்விளைஞனின் மரணத்துக்கான காரணம் எதுவென இன்னுமே உறுதிப்படுத்தப்படவில்லை. ஆனாலும் பொலிஸ் தடுப்புக் காவலில் உள்ள போது சம்பவித்த இம்மரணம் இயற்கையான மரணமல்ல என்பது உண்மை.

கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபரை, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும் வரை மிகுந்த அவதானத்துடன் கையாள வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு.

தற்கொலையோ அல்லது வேறேதும் காரணங்களாலான மரணமோ எதுவென்றாலும் பொலிஸாரின் கவனக்குறைவு அங்கே உள்ளதென்பதை ஒப்புக் கொள்ளாமலிருக்க முடியாது.

இது போன்ற சம்பவமானது இதுவே முதன்முறையென்றும் கூறுவதற்கில்லை.

பொலிஸாரின் பொறுப்பில் இருந்து சந்தேக நபர்கள் மரணமடைந்த ஒன்றிரண்டு சம்பவங்கள் இதற்கு முன்னரும் நடந்துள்ளன.

இதுபோன்ற பல்வேறு சம்பவங்களே பொதுமக்கள் மத்தியில் அவநம்பிக்கை ஏற்படுவதற்குக் காரணமாக அமைகின்றன.

பொலிஸ் துறையில் நிலவுகின்ற குறைபாடுகள் எமது நாட்டுக்கு மாத்திரமே உரியதல்ல. இந்தியா, பாகிஸ்தான் போன்ற பல்வேறு நாடுகளிலும் இவ்வாறான குறைகள் இல்லாமலில்லை.

இவற்றுக்கெல்லாம் அப்பால், ஜனநாயக நாடொன்றில் பொலிஸார் கொண்டுள்ள பொறுப்பு சாதாரணமானதல்ல.

அவர்கள் நீதியின் காவலர்கள்; அப்பாவி மக்கள் தங்களுக்கு நீதி கிடைப்பதற்காக பொலிஸாரையே நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

நாட்டு மக்களின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் வழியேற்படுத்திக் கொடுப்பவர்கள் அவர்களே.

இவ்வாறான பெரும் பொறுப்பை பொலிஸ்துறையிலுள்ள அனைவரும் உணர்ந்து கொள்வது முக்கியம்.

Latest Offers

loading...

Comments