அண்மையில் கிளிநொச்சியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து பொலிஸார் தீவிர விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் மாணவர்கள் இருவர் பொலிஸாரினால் படுகொலை செய்யப்பட்ட பின்னர், அந்தப் பகுதியில் ஒருவித அசாதாரண சூழ்நிலை காணப்பட்டது.
எனினும் மாணவர்கள் இருவரின் மரணத்தின் பின்னர் கிளிநொச்சி நகரின் பாதுகாப்பு நிலைமை முழுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 25ஆம் திகதி வடமாகாணம் முழுவதிலும் இடம்பெற்ற ஹர்த்தால் கிளிநொச்சி நகரத்திலும் அனுஷ்டிக்கப்பட்டது. அதனை முன்னரே அறிந்திருந்த போதிலும், அது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட பொலிஸார் உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
கிளிநொச்சி பாதுகாப்பு வீழ்ச்சியடைவதற்கு அதுவே பிரதான காரணமாகியுள்ளது. அத்துடன் குறித்த ஹர்த்தாலுக்கு ஆதரவு வழங்காமல் பயணித்த இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ் மீது சிலரினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அந்த பஸ்ஸின் சாரதி காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்ட அன்றைய தினத்தில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அதன் வன்முறையாகவும் வெடித்திருந்தது. இதன்போது பொலிஸார் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் காயமடைந்த பொலிஸார் தற்போது அனுராபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய நபர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.