1983ஆம் ஆண்டுக்கு பின்னர் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் எவரையும் விடுதலைப் புலிகள் படுகொலை செய்யவில்லை என பாராளுமன்றில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகிய இரு மாவட்டங்களிலும் விடுதலைப் புலிகளினால் படுகொலை செய்யப்பட்டவர்களின் விபரங்களை வெளியிடுமாறு கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர கோரியிருந்தார்.
இந்நிலையில், நேற்றைய தினம் பாராளுமன்றில் கேள்வி நேரத்தின் போது உதயசாந்த குணசேகர பிரசன்னமாகியிருக்கவில்லை. எனினும், அவருடைய கேள்விகளுக்கு பாராளுமன்றில் ஆற்றுப்படுத்தப்பட்டன.
இதன் போது மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1983ஆம் ஆண்டுக்குப் பின்னர், விடுதலைப் புலிகளினால் புத்தளம் மாவட்டத்தில் 48 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 1,333 பேரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்த காலப்பகுதியில் புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் ஒருவரையேனும் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்படவில்லை.
அத்துடன், குறித்த காலப்பகுதியில் புத்தளம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் அரசியல் கட்சி தலைவர்கள், உறுப்பினர்கள் எவரும் படுகொலை செய்யப்படவில்லை.
எவ்வாறாயினும், திருகோணமலை மாவட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட 1,333 பேரில், ஏழு சீன இனத்தவர்களும், அடையாளம் காணப்படாத நாட்டவர்கள் 42 பேரும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த படுகொலை சம்பவங்கள் இடம்பெற்று அதிக காலம் கடந்துள்ளது. இந்நிலையில். இந்த சம்பவங்கள் தொடர்பில் முழுமையான விபரங்களை திரட்ட கால அவகாசம் தேவைப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.