பளை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் விடுதலைப் புலிகளா?

Report Print Murali Murali in பாதுகாப்பு

கிளிநொச்சி, பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் பின்னணியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னிணி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் தமிழகத்தில் தலைமறைவாக இருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் மீண்டும் தாயகம் திரும்பிய நிலையிலேயே கிளிநொச்சி பளை பகுதியில் பொலிஸாரை இலக்கு வைத்து துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இந்த சம்பவத்தின் மூலம் விடுதலைப் புலிகளின் ஆயுதப்போராட்டம் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது என்ற செய்தி வழங்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 12ஆம் திகதி முதல் 18ஆம் திகதி வரை முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தினமாக பிரகடனப்படுத்தி, ஜனாதிபதியின் முல்லைத்தீவு விஜயத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்ட நிலையில், மறுநாள் அதிகாலை 2.45 மணியளவில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் அடுத்த ஆயுதப் போராட்டத்திற்கு தயார் என்ற செய்தியை சொல்லியுள்ளனர். அந்த செய்தியினை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

புலனாய்வு பிரிவு தற்போது செயலிழப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆயுததாரிகளும், பிரிவினை வாதிகளும் சுதந்திரமாக செயற்படுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You may like this video


Comments