அனர்த்தங்களிலிருந்து மக்களைக் காக்க விசேட அனர்த்த அபாயப் பிரிவு அமைப்பு!

Report Print Rakesh in பாதுகாப்பு

அனர்த்தங்களிலிருந்து மக்களைப் பாதுகாக்கவும், அவசர நிலைமைகளின்போது எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் விசேட அனர்த்த அபாயப் பிரிவொன்றை நிறுவுவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று நடைபெற்றது. இதன்போது சீரற்ற காலநிலையால் நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தங்கள் தொடர்பிலும், அரசின் நிவாரணப் பணிகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.

குறிப்பாக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நபரொருவருக்கு ஒருவேளை உணவுக்கான அரசின் உத்தேச மதிப்பீட்டுத்தொகை 225 ரூபாவிலிருந்து 300 ரூபாவரை அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சேதமடைந்துள்ள வீடுகளுக்கு மதிப்பீட்டின் பிரகாரம் நட்டஈடு வழங்கப்படவுள்ளது. அமைச்சர்களுக்கும், அமைச்சுகளுக்கும் வாகனங்களைக் கொள்வனவு செய்வதற்காக குறைநிரப்புப் பிரேரணைகள் ஊடாக ஒதுக்கப்பட்ட நிதியை நிவாரண நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இவ்வருடம் அமைச்சர்களுக்கும், அமைச்சுகளுக்கும் வாகனக் கொள்வனவு இடம்பெறாது.

அதேவேளை, விசேட அனர்த்த அபாயப் பிரிவொன்றை அமைத்து, நவீன தொழில்நுட்பங்கள் ஊடாக அனர்த்தங்களை முன்கூட்டியே அறிந்து, மக்களை அதிலிருந்து காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரிவு எவ்வாறு செயற்படும், எத்துறையினரை இதில் உள்ளடக்கலாம், இந்தப் பிரிவின் செயற்பாடுகளை மக்களின் நாளாந்தப் பணிகளுடன் எப்படி தொடர்புபடுத்துவது என்பது பற்றியெல்லாம் இனிவரும் நாட்களில் ஆராயப்படவுள்ளது.