அபாய அறிவிப்பு விடுத்ததும் வீட்டிலிருந்து உடன் வெளியேறுக! அலட்சியப்படுத்துவது குற்றம்

Report Print Rakesh in பாதுகாப்பு

காலநிலை தொடர்பான தகவல்களை முன்கூட்டியே துள்ளியமாகக் கணிப்பதற்குரிய தொழில்நுட்ப வசதி வளிமண்டளவியல் திணைக்களத்திடம் இல்லை என்றும், அத்தகைய தொழில்நுட்ப பொறிமுறைய உருவாக்கவதற்குரிய நடவடிக்கையில் அரசு ஈடுபட்டுள்ளது என்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.

அத்துடன், காலநிலை குறித்த தகவல்கள், அனர்த்த அபாய அறிவிப்புகள் சம்பந்தமாக கவனம் செலுத்துவதில் இலங்கைவாழ் மக்கள் ஆர்வம்காட்டுவதில்லை. வெள்ளம் தலைக்குமேல்வரும்வரை அதை கண்டுகொள்வதேயில்லை.

எனவே, அபாய அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் வீட்டிலிருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்லாமல் இருப்பதை குற்றச்செயலாகக் கருதும் வகையில் சட்டம் இயற்றப்படவேண்டும் என்றும் அவர் கூறினார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

"அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. எனினும், இது தொடர்பில் வளிமண்டளவியல் திணைக்களம் முன்கூட்டியே எச்சரிக்கை எதையும் விடுக்கவில்லை. இதனால்தானே பேரனர்த்தம் ஏற்பட்டுள்ளது" என்று ஊடகவியலாளர்கள் கேள்வி நேரத்தின்போது வினாக்களைத் தொடுத்தனர்.

இதற்குப் பதிலளிக்கையில் அமைச்சர் கூறியவை வருமாறு,

"கடும் மழைபெய்யும், கடும் காற்று வீசும் என்று கடந்த 24 ஆம் திகதி வளிமண்டளவியல் திணைக்களம் அறிவிப்பு விடுத்திருந்தது. எந்தெந்த பகுதிகளில் மழைபெய்யும் என்றும் அது குறிப்பிட்டிருந்தது.

எனினும், இத்தனை மில்லி மீற்றர்தான் மழைபெய்யும் என துள்ளியமாக முன்கூட்டியே கணிப்பிடுவதற்குரிய தொழில்நுட்ப வசதி எம்மிடம் இல்லை.

வெளிநாடுகளில்போல் முன்கூட்டியே அறிந்துகொள்வதாக இருந்தால் அதற்கென்று செய்மதியொன்று அவசியம். உச்சப்பட்ட தொழில்நுட்பமும் இருக்கவேண்டும். அதைபெறுவதற்கு முயற்சிக்கின்றோம். ஜப்பானிடம் உதவிகோரப்பட்டுள்ளது. உலக வங்கியும் ஒத்துழைப்பு வழங்கும்.

எனவே, இனிவரும் வருடங்களில் வானிலை தொடர்பான தகவல்களை துள்ளியமாக கணித்துக்கொள்வதற்குரிய பொறிமுறை உருவாக்கப்படும். அதை நோக்கிநாம் நகர்ந்துவருகின்றோம். அவசர நிலைமைகளை சந்திக்க தயாராகவேண்டும்.

பூகோளம் வெப்பமடைந்துவருகின்றது. இதனால், பாரிய அனர்த்தங்கள் ஏற்படும் அபாயம் இருக்கின்றது. அவை குறித்தும் விழிப்பாக இருக்கவேண்டும்.

வளிமண்டளவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்கள் நிறைய தடவைகள் சரியாக அமைந்துள்ளன. எனினும், வளிமண்டளவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல்களை எம்மவர்கள் கேட்பதில்லை. அபாய எச்சரிக்கை விடுத்தாலும் அது குறித்து கவனம் செலுத்துவதில்லை.

வீட்டுக்கு மேல் தண்ணீர் வரும்வரை அங்கிருந்து வெளியேறமாட்டார்கள். எச்சரிக்கை விடுத்தும் அவ்வாறு வெளியேறாமல் இருப்பது தண்டனைக்குரிய குற்றம் என்பதை வலியுறுத்தும் வகையில் சட்டம் கொண்டுவரப்படவேண்டும்.

பிரிட்டன் போன்ற நாடுகளில் காலையில் வெளியில் செல்லும்போது அன்றைய நாளுக்குரிய வானிலை பற்றிய தகவல்களை அறிந்துகொள்வர். எனவே, எமது நாட்டிலும் இவ்வாறானதொரு நிலையேற்படவேண்டும். ஊடகங்களும் இது விடயத்தில் கவனம் செலுத்தப்படவேண்டும்.

அனர்த்தத்தின்போது நான் நாட்டில் இருக்கவில்லை. எனினும், பிரதி அமைச்சர் உரிய நடவடிக்கைகளை எடுத்திருந்தார். அனர்த்தங்களை எதிர்கொள்வதற்குத் தயாராகி வருகின்றோம். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

உலர் உணவுகளைத் தயாரித்துப் பாதுகாத்து வைக்கும் பொறிமுறை உட்பட ஏனைய சில காரணங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்படும்.

உயிரிழந்தவர்களுக்கு நட்டஈடு வழங்கப்படும். நிவாரணங்களை வழங்குவதற்குரிய பொறுப்பு பிரதேச செயலகங்களிடமும், கிராம அதிகாரிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகள் புனரமைத்துக்கொடுக்கப்படும்" என்றார்.