3 நாட்களின் பின் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய மாணவனின் சடலம்! தவிக்கும் பெற்றோர்

Report Print V.T.Sahadevarajah in பாதுகாப்பு

சாய்ந்தமருது கடலில் குளிக்கச் சென்று காணாமல் போன மாணவன் சஹாப்தீன் இன்சாப்பின் சடலம் சற்றுமுன்னர் கரையொதுங்கியுள்ளது.

சாய்ந்தமருது - 11ஆம் பிரிவைச் சேர்ந்த முஹம்மட் சஹாப்தீன் இன்சாப் (வயது -16) என்ற மாணவனின் சடலமே திருக்கோவில் கடற்கரையில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருக்கோவில் பொலிஸார் குறித்த மாணவனின் குடும்பத்தினருக்கு அறிவித்த நிலையில் அவர்கள் திருக்கோவில் கடற்கரைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டுள்ளனர்.

பிரேதபரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என்று பொலிஸார் மற்றும் நீதிபதி குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளனர்.

மகன் உயிரோடு இருக்கின்றாரா? மரணித்துவிட்டாரா? என்று தெரியாமல் கடந்த 4 தினங்களாக தவித்துக்கொண்டிருந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தாருக்கு மாணவன் உயிரிழந்த செய்தி கிடைக்கப்பெற்றதும் அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் க.பொ.த.சாதாரண தரத்தில் கல்வி பயில்கின்ற ஆறு மாணவர்கள் கடந்த சனிக்கிழமை சாய்ந்தமருது முகத்துவாரத்தை அண்மித்துள்ள கடலில் குளித்துக் கொண்டிருந்த போது மூவர் கடல் அலையில் சிக்குண்டு மூழ்கியுள்ளனர்.

இவர்களுள் இருவர் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு, ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர்.

ஏனைய மூன்று மாணவர்களும் பாதுகாப்பாக வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அதேவேளை குறித்த ஒரு மாணவன் காணாமல் போயிருந்தமை தொடர்பில் கல்முனை பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்தது.

குறித்த மாணவனை தேடும் பணிகள், மீனவர்களின் உதவியுடன் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் மாணவனின் சடலம் இன்று காலை சாய்ந்தமருதில் இருந்து சுமார் 33 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள திருக்கோவில் பகுதியில் அவரது சடலம் கரையொதுங்கியுள்ளது.

மேலதிக செய்திகள் - நேசன்