வடக்கின் அமைதியை குலைக்கும் விஷமிகள்!

Report Print Samy in பாதுகாப்பு

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவங்கள் இப்போது மீண்டும் அதிகரித்திருப்பதனால், அங்குள்ள மக்கள் மத்தியில் இனம்புரியாத பீதி நிலைமையொன்று உருவாகியிருக்கின்றது.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட பின்னர் யாழ். மண்ணில் தோன்றியுள்ள மோசமானதொரு அச்சம் இதுவாகும்.

ஆயுத மோதல்கள் ஓய்ந்த பின்னர், அங்குள்ள சாதாரண மக்கள் தங்களது வாழ்க்கையை மீளக்கட்டியெழுப்புவதற்கு பிரயத்தனப்பட்டுக் கொண்டிருக்கையில், மற்றொரு வடிவில் வன்முறை தலையெடுப்பதை உணர முடிகின்றது.

யாழ். பிரதேசத்தின் எதிர்கால முன்னேற்றத்துக்கு இது ஆபத்தானது.

வடக்கில் வாள்வெட்டுக் குழுக்களை அடக்கியொடுக்குவதற்கு அரசாங்கம் அதியுச்ச நடவடிக்கையை மேற்கொண்டிருப்பதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க தெரிவித்திருக்கிறார்.

அங்குள்ள சட்டவிரோத குழுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாருக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சாகல தெரிவித்துள்ளார்.

இதேசமயம், யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனும் பொலிஸ் உயரதிகாரிக்கு கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

வாள்வெட்டுக் கும்பல்களைத் தேடிக் கண்டுபிடித்து சட்டத்தின் முன்னால் நிறுத்துமாறு மேல்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இவ்விரு உத்தரவுகளையுமடுத்து யாழ்குடாநாட்டில் வாள்வெட்டுக் கும்பல்களைத் தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக் கும்பல்களை பொலிஸார் இவ்வாறு தீவிரமாகத் தேடுவது இதுதான் முதன்முறையல்ல.

வாள்வெட்டுக் கும்பல்கள் சில மாதங்களுக்கு முன்னர் யாழ். பிரதேசத்தில் மோசமாகத் தலையெடுத்திருந்த வேளையில், அவ்விவகாரம் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதனையடுத்து அரசாங்கத்தின் விசேட உத்தரவையடுத்து பொலிஸார் களத்தில் இறங்கியிருந்தனர்.

வாள்வெட்டுக் கும்பல்களைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டதாகவும், முக்கியஸ்தர்களைத் தேடி பொலிஸார் வலை விரித்துள்ளதாகவும் அவ்வேளையில் ஊடகங்களில் பரபரப்புச் செய்திகள் வெளியாகியிருந்தன.

வன்முறைக் கும்பல்களின் அட்டகாசம் இத்துடன் முடிந்து விடுமென்றுதான் மக்களும் அப்போது நிம்மதியடைந்திருந்தனர்.அன்று உருவான அமைதி சில மாதங்களுக்கு மட்டுமே நீடித்தது.

வாள்வெட்டுத் தாக்குதல் அச்சம் இப்போது மீண்டும் தலைதூக்கி விட்டது. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாடவே அஞ்சுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் மூலம் அறிய முடிகின்றது.

கடந்த வாரம் யாழ்நகரை அண்மித்துள்ள கோண்டாவில், நல்லூர், சங்குவேலி, ஆறுகால்மடம் உள்ளிட்ட ஆறு இடங்களில் ஒரே இரவில் வெவ்வேறு வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இச்சம்பவங்களில் ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர்.

அது மாத்திரமன்றி வாள்வெட்டுக் கும்பல்கள் நடத்திய வன்முறையினால் பல இலட்சம் ரூபா பெறுமதியான உடைமைகளும் சேதமடைந்துள்ளன.

இச்சம்பவங்களைப் பார்க்குமிடத்து, வன்முறைக் கும்பல்களின் அட்டகாசம் மீண்டும் அதிகரிப்பதற்கான அறிகுறியே இப்போது தென்படுகின்றது.

யாழ். மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனின் உத்தரவையடுத்து யாழ்நகர், கொக்குவில் சந்தி. கலட்டிச்சந்தி, கோண்டாவில், உரும்பிராய் போன்ற பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.

எனினும் வன்முறைக் கும்பல் முழுமையாகக் கைது செய்யப்பட்டு, தண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டாலேயே மக்கள் மத்தியில் அச்சம் நீங்குவதற்கு வழியேற்படும்.

யாழ். மண்ணில் வாள்கள் சகிதம் வன்முறையில் ஈடுபடும் இக்கும்பல்களில் உள்ளோர் யாரென்பது மக்களுக்கு உண்மையில் தெரியாது. அது மட்டுமன்றி இவ்வன்முறைக் கும்பல்களின் உண்மையான குறிக்கோள் எதுவென்றும் மக்கள் அறிந்திருக்கவில்லை.

எந்தவொரு சம்பவத்திலுமே தொடர்பில்லாத சாதாரண மக்கள் மீது இக்கும்பல் எதற்காக இவ்வாறு கொடூரத் தாக்குதல் நடத்துகின்றதென்பது எவருக்குமே தெரியாதுள்ளது.

மக்கள் பலவிதமாகப் பேசிக் கொள்கின்றபோதிலும் அவை அனைத்துமே ஊகங்களாகவே உள்ளன. சினிமா மோகம் கொண்ட இளைஞர் கும்பலொன்று இன்றைய தமிழ் சினிமாக்களில் வருவது போன்று இவ்வாறான வாள்வெட்டுகளில் ஈடுபடுவதாக சிலர் பேசிக் கொள்கின்றனர்.

புலம்பெயர்ந்துள்ள உறவினர்கள் அனுப்புகின்ற பணத்தை வைத்துக் கொண்டு இவ்விளைஞர்கள் மது, போதைவஸ்து, வன்முறைத் தாக்குதல் போன்ற சமூக சீரழிவான செயல்களில் ஈடுபட்டு வருவதாக மக்கள் கருதுகின்றனர்.

இது தவிர, இராணுவ புலனாய்வுப் பிரிவிலுள்ள சிலரின் பின்புலத்துடன் இக்குழுக்கள் செயற்படுவதாக மற்றொரு சாரார் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஆனால் ‘ஆவா’ குழுவென்று வடக்கில் குறிப்பிடப்படுகின்ற இக்கும்பலின் பின்புலம் குறித்து இதுவரை ஆதாரபூர்வமான தகவல்கள் எதுவுமே வெளிவரவில்லை.

இக்குழுவின் தகவல்கள் அனைத்தும் மர்மமாகவே இருக்கின்றன.ஆனாலும் ஒரு விடயத்தை மாத்திரம் வடக்கு மக்கள் தெளிவாகவே கூறுவதைக் கேட்க முடிகின்றது.

இளைஞர்கள் சுயமாக வாள்களைத் தூக்கியபடி இவ்வாறு அட்டகாசத்தில் ஈடுபடுவதற்கு வாய்ப்பில்லை.

ஏதோவொரு பின்புலம் இவ்விளைஞர்களுக்கு இருக்கக் கூடுமென்பதே மக்களின் கருத்து. ஏதோவொரு நிகழ்ச்சித் திட்டத்துக்காக இவ்விளைஞர்கள் பயன்படுத்தப்படுகின்றனரோ என்பது தான் மக்களின் சந்தேகமாகும்.

யாழ்ப்பாணத்தில் ஓரிரு இடங்களில் நடந்துள்ள வாள்வெட்டுச் சம்பவங்கள் சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியிருக்கின்றன.

இவ்வன்முறைக் கும்பல்களில் உள்ளோர் இளவயதினர் என்பது தெரிகின்றது. ஆனாலும் அவர்கள் முகத்தை மூடுகின்ற தலைக்கவசம் அணிந்திருப்பதனால் ஆட்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாதிருக்கின்றது.

கண்ணியம் மிக்க குடும்பப் பின்னணியையோ அல்லது கல்விகற்ற குடும்பத்துப் பின்புலத்தையோ அவர்கள் கொண்டிருப்பதாக நடத்தைகள் காண்பிக்கவில்லை.

எது எவ்வாறாயினும் இதுபோன்றதொரு வன்முறையை வளர விடுவது ஆரோக்கியமானதல்ல. மக்கள் நிம்மதியாக வாழ வேண்டுமானால் இக்கும்பல்கள் சமூகத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவது அவசியம்.

thinakaran.lk