தகாத உறவால் ஏற்பட்ட விபரீதம்? தடுக்கச் சென்ற இளைஞனின் கொலையில் வெளிவந்த தகவல்கள்

Report Print Rusath in பாதுகாப்பு

மட்டக்களப்பு - கற்சேனை, நீலண்டமடு பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்த சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

மேலும் தெரியவருவதாவது,

கற்சேனை பகுதியில் அமைந்துள்ள நீலண்டமடு எனும் இடத்தில் உள்ள வீட்டில் நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதை இரு இளைஞர்கள் தடுக்க முற்பட்டுள்ளனர்.

இதன்போது தகராறில் ஈடுபட்ட நபர் சீவல் தொழிலுக்காக பயன்படுத்தும் கத்தியினால் இளைஞன் ஒருவனின் வயிற்றை வெட்டியுள்ளார். இதில் ஒரு இளைஞன் உயிரிழந்ததுடன், மற்றைய இளைஞனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

அரசடித்தீவு கிராமத்தைச் சேர்ந்த 18 வயதுடைய அழகுதுரை அதீஸ்காந்தன் உயிரிழந்ததுடன், அரசடித்தீவு கிராமத்தைச் சேர்நத 18 வயதுடைய வசந்தராசா டெனீஸ்காந் என்ற இளைஞனுக்கு இடுப்புப் பகுதியில் கத்தி வெட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவத்தை அறிந்த கொக்கட்டிச்சோலைப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்ததுடன் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதன்போது பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

கொலை நடந்த வீட்டுக்கு அயல் வீட்டில் சீவல் தொழிலுக்காக மகிழடித்தீவு கிராமத்தைச் சேர்ந்த சீவல் தொழிலாளர் ஒருவர் வந்து செல்வார்.

இதன்போது அவ்வீட்டிலிருந்த பெண்ணுடன் தகாத முறையில் நடந்து வந்துள்ளார். இந்த தொடர்பு சுமார் ஒருவருடத்திற்கும் மேலாக காணப்பட்டுள்ளது. இது தொடர்பில் அயல் வீட்டுக்காரருக்கு தெரிந்திருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் அந்த தொழிலாளர் நேற்று கொலைச் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு துவிச்சக்கர வண்டியில் வந்து வீட்டுத் தலைவனை அழைத்துள்ளார்.

அப்போது அவரது மனைவி ஏன் எனது கணவனை கூப்பிடுகின்றீர்கள் எனக்கேட்டுள்ளார். மேலும் குறித்த குடும்பத்தாரின் மகனின் நண்பர்களும் அங்கு நின்றுள்ளார்கள்.

அப்போது நண்பர்களும், ஏன் எனது நண்பனின் தந்தையைக் கூப்பிடுகின்றீர்கள் என வினவியுள்ளார்கள்.

அதற்கு குறித்த சீவல் தொழிலாளர் சத்தமாக பேசியுள்ளார். இளைஞர்களும் என்ன அடிக்கப்போகின்றீர்களான என வினவியுள்ளனர்.

அதற்கு சீவல் தொழிலாளி அவர் கொண்டு வந்த துவிச்சக்கர வண்டியைத் தூக்கி ஒரு இளைஞனுக்கு அடித்துள்ளார்.

அதனைத் தடுக்கச் சென்ற மற்ற இளைஞனான வசந்தராசா டெனீஸ்காந்த என்பவருக்கு அவர் இடுப்பிலே மறைத்து வைத்திருந்த சீவல் தொழிலுக்குப் பயன்படுத்தும் கத்தியால் குத்தியுள்ளார்.

இவற்றை அவதானித்துக் கொண்டிருந்த அழகுதுரை அதீஸ்காந்தன் என்பவர் சீவல் தொழிலாளரான கொலையாளியை தடுக்க முற்பட்ட போது அந்த இளைஞனை கத்தியால் வயிற்றுப் பகுதியில் வெட்டிக் கொலை செய்துள்ளார் என இச்சம்பவத்தை நேரில் அவதானித்துக் கொண்டிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மட்டக்களப்பு குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் இன்று காலை சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து பரிசோதனைகளையும், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

Latest Offers