போர் விமானங்கள் வாங்குவதில் இழுபறி! புத்துயிர் பெறும் கிபீர்

Report Print Hariharan in பாதுகாப்பு
184Shares

அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்வாகம் கடந்த 9ம் திகதி சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட மறுநாள் இந்திய விமானப்படைத் தளபதி எயார்சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ தனி விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அம்பாந்தோடடை துறைமுக கையளிப்பும் சரி, இந்திய விமானப்படைத் தளபதியின் பயணமும் சரி எதேச்சையாக நிகழ்ந்தவை அல்ல. முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டவை தான்.

இந்திய விமானப்படைத் தளபதி கொழும்பு வந்திறங்கிய அன்று அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறித்து இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கவலை கொண்டிருப்பதாக இராஜதந்திர வட்டாரங்களை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.

அம்பாந்தோட்டையில் சீனா கடற்படைத் தளத்தை அமைத்து விடுமோ என்பதே இந்த நாடுகளின் கவலை என்று அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.

இலங்கையும் சரி, சீனாவும் சரி அம்பாந்தோட்டை துறைமுக அபிவிருத்தி திட்டத்தை ஒரு பாதுகாப்பு மூலோபாயத் திட்டமாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை.

அம்பாந்தோட்டை துறைமுகத்தை தாம் முற்றிலும் வணிக நோக்கத்துக்காகவே பயன்படுத்தவுள்ளதாகவும், உலகின் செழிப்புக்காக தாம் முன்னெடுக்கும் பட்டுப்பாதைத் திட்டத்தின் ஓர் அங்கமே இது என்றும் சீனா கூறுகிறது.

அதேவேளை அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா இராணுவத் தேவைகளுக்குப் பயன்படுத்த முடியாது என்றும் அதற்கான அனுமதிகள் ஏதும் வழங்கப்படவில்லை என்றும் இலங்கை அரசாங்கமும் கூறுகின்றது.

ஆனாலும் இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகள் இதனை நம்பத் தயாராக இல்லை. இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்பு வலுச் சமநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகத் தான் இந்த நாடுகள் இதனைப் பார்க்கின்றன.

இதனால் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் ஊடாக ஏற்படக்கூடிய பாதுகாப்புச் சவால்களை எதிர்கொள்ளக் கூடிய மாற்றுத் திட்டங்களை இந்த நாடுகள் வகுக்கத் தொடங்கியுள்ளன.

இதன் ஒரு கட்டமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தில் இருந்து 27கி.மீ. தொலைவில் உள்ள மத்தள விமான நிலையத்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு இந்தியா முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் இது பற்றிய உயர்மட்டப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. மத்தள விமான நிலையம் இந்தியாவின் உதவியுடன் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது என்பதை பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே அறிவித்துள்ளார்.

இந்தச் சூழலைப் பொருத்திப் பார்க்கும் போது அம்பாந்தோட்டை துறைமுகம் சீன நிறுவனத்திடம் கையளிக்கப்பட்ட மறுநாள் இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீவ் மார்ஷல் பிரேந்தர் சிங் டனோ கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கியதற்குப் பின்னால் எந்த அரசியல் பாதுகாப்பு நோக்கமும் இல்லை என்று கூறமுடியாது.

இந்திய விமானப்படைத் தளபதியின் இலங்கைப் பயணம் பிராந்தியப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையில் கூறப்பட்டிருந்ததும் கவனிக்கத்தக்கது.

இந்திய விமானப்படைத் தளபதி கொழும்பில் தங்கியிருந்த போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாதுகாப்பு அமைச்சின் உயர்மட்டங்களுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

அவரது இந்தப் பயணத்துடன் மூன்று முக்கிய விடயங்கள் தொடர்புபட்டிருந்தன. அம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு ஈடாக மத்தள விமான நிலையத்தை பெற்றுக்கொள்வது, சீனக்குடா விமானப்படைத் தளம் மற்றும் திருகோணமலை துறைமுகம் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்துவது, இலங்கை விமானப்படையின் போர் விமான அணியைப் பலப்படுத்துவது.

இந்திய விமானப்படைத் தளபதி மத்தள விமான நிலையத்துக்குச் செல்லவில்லை. ஆயினும் அதனை எவ்வாறு இந்தியாவின் பாதுகாப்பு நலன்களுக்குப் பயன்படுத்தலாம் என்ற கோணத்தில் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.

அத்துடன் சீனாவின் குறியாக இருந்த சீனக்குடா விமானப்படைத் தளத்துக்கும் இந்திய விமானப்படைத் தளபதி சென்றிருந்தார்.

சீனக்குடாவில் உள்ள இலங்கை விமானப்படையின் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று வெளியேறும் விமானப்படையினரின் அணிவகுப்பை பார்வையிட்டிருந்தார் இந்திய விமானப்படைத் தளபதி.

இலங்கை விமானப்படையின் வரலாற்றில் விமானப்படையினர் பயிற்சி முடித்து வெளியேறும் நிகழ்வு ஒன்றில் வெளிநாட்டு விமானப்படைத் தளபதி ஒருவர் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

சீனக்குடாவில் தமது நாட்டுத் தயாரிப்பான விமானங்களைப் பழுது பார்த்த புதுப்பிக்கும் நிலையம் ஒன்றை அமைப்பதற்கு 2014ம் ஆண்டு சீனா முயற்சிகளை மேற்கொண்டது. எனினும் இந்தியாவின் எதிர்ப்பை அடுத்தே சீன நிறுவனத்தின் அந்த முயற்சிக்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கவில்லை.

இதையடுத்து தற்போதைய அரசாங்கம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த பழுது பார்த்து புதுப்பிக்கும் நிலையத்தை அமைக்க அனுமதி கொடுத்து, இங்கு சீனத் தயாரிப்பு விமானங்களைப் பழுது பார்த்து புதுப்பிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சீனக்குடா விமானப்படைத் தளம், திருகோணமலை துறைமுகம் என்பனவற்றின் மீது இந்தியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்து வைத்திருக்கவே முனைகிறது.

அதேவேளை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் உள்ள முரண்பாடுகளினால் இலங்கை விமானப்படை நெருக்கடியான நிலையில் சிக்கியுள்ளது.

இப்போது இலங்கை விமானப்படையிடம் ஜெட் போர் விமான அணி என்று கூறுகின்ற அளவுக்கு எதுவும் கிடையாது.

விடுதலைப் புலிகளுடனான போர் நடந்து கொண்டிருந்த போது மிக், கிபீர், எவ்-7 போர் விமானங்களைக் கொண்ட அணிகளைக் கொண்டிருந்த விமானப்படையிடம் இப்போது விரல் விட்டு எண்ணிடத்தக்க போர் விமானங்களே உள்ளன.

பறக்கக் கூடிய நிலையில் இஸ்ரேலிய தயாரிப்பாக கிபீர் போர் விமானம் ஒன்றும் சீனத் தயாரிப்பான எவ்-7 போர் விமானங்கள் மூன்றுமே இருக்கின்றன.

ஐந்து கிபீர் போர் விமானங்களும் மிக் போர் விமானங்களும் பயன்பாட்டுக் காலம் முடிந்த நிலையில் கட்டையில் ஏற்றப்பட்டுள்ளன.

இதற்குப் பதிலாக எட்டு போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவையிடம் அனுமதி பெறப்பட்டு பல மாதங்களாகியும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

காரணம் சீன தொழில்நுட்பத்துடன் பாகிஸ்தான் தயாரித்த ஜே.எவ்-17 போர் விமானங்களைக் கொள்வனவு செய்வதே இலங்கை விமானப்படையின் விருப்பமாக இருந்தது.

இதற்கான பேச்சுக்கள் நடத்தப்பட்டு உடன்பாடும் கைச்சாத்திடப்படவிருந்த போது இந்தியா தலையிட்டது. பாகிஸ்தானிடம் இருந்து போர் விமானங்களை கொள்வனவு செய்யக் கூடாது என்று அழுத்தம் கொடுத்தது.

அத்துடன் தனது சொந்தத் தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை வழங்குவதாகவும் கூறியது.

இந்த இழுபறிகளால் இலங்கை அரசாங்கம் போர் விமானங்களைக் கொள்வனவு செய்வது குறித்த எந்த முடிவையும் எடுக்க முடியாமல் இருக்கிறது.

இதனால் விமானப்படையில் இருந்த போர் விமான அணிகள் வலுவிழந்து செயலிழந்து போயிருக்கின்றன.

பாகிஸ்தான் - இந்திய அதிகாரப் போட்டிக்குள் சிக்கியுள்ள இலங்கை விமானப்படையின் நிர்க்கதி நிலையை உணர்ந்து கொண்ட இஸ்ரேலின் ஐ.ஏ.ஐ எனப்படும் israel Aerospace Industries நிறுவனம் புதிய காய்நகர்த்தலில் ஈடுபட்டுள்ளது.

விமானப்படையின் பயன்பாட்டில் இருந்து கழித்து விடப்பட்ட நிலையில் உள்ள ஐந்து கிபீர் போர் விமானங்களையும் புதுப்பித்து தரமுயர்த்திக் கொடுப்பது குறித்து இந்த நிறுவனம் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுக்களை ஆரம்பித்திருக்கிறது.

கிபீர் என்றால் ஹீப்ரு மொழியில் சிங்கக்குட்டி என்று அர்த்தம். இந்த கிபீர் போர் விமானங்களை இஸ்ரேலின் ஐஏஐ நிறுவனமே உற்பத்தி செய்கிறது. பிரான்ஸின் மிராஜ் 5 போர் விமானத்தின் தொழில்நுட்பங்களுடன் இதனை இஸ்ரேல் தயாரிக்கிறது.

1996ம் ஆண்டு முதல் முறையாக இலங்கை விமாப்படையில் கிபீர் போர் விமானங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டன. புலிகளுக்கு எதிரான போரில் கிபீர் போர் விமானங்கள், தரைத் தாக்குதலுக்கான முக்கியமான ஒரு சொத்தாகவே பார்க்கப்பட்டது.

இப்போது விமானப்படையிடம் உள்ள கிபீர் போர் விமானங்கள் காலம் கடந்து வானில் பறக்க முடியாத நிலையில் உள்ளன. இவற்றை மீண்டும் புதுப்பித்து நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் மறுசீரமைத்துக் கொடுப்பது பற்றிய பேச்சுக்களிலேயே இஸ்ரேலிய நிறுவனம் இறங்கியுள்ளது.

இலங்கை விமானப்படையில் இருந்து கிபீர் போர் விமானங்கள் முற்றாகவே வெளியேற்றப்பட்டு விடும் என்ற சூழல் உருவாகியிருந்த நிலையில் தான் மீண்டும் கிபீர் விமானங்களுக்கு உயிர் கொடுக்கும் திட்டத்தை இஸ்ரேலிய நிறுவனம் முன்வைத்திருக்கிறது.

இது குறித்த பேச்சுக்களில் ஐஏஐ நிறுவனம் இறங்கியுள்ளதாக கடந்த 12ம் திகதி அந்த நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் ஜேன்ஸ் டிபென்ஸ் வீக்லியிடம் கூறியிருந்தார்.

ஏற்கனவே சீனாவிடம் வாங்கிய எவ்-7 போர் விமானங்களை பாகிஸ்தான் மறுசீரமைத்துக் கொடுத்திருந்தது. அந்த மூன்று எவ்-7 போர் விமானங்களே இப்போது விமானப்படையின் பிரதான சண்டை விமானங்களாக உள்ளன.

இந்திய - பாகிஸ்தான் இழுபறிகளில் இருந்து தப்பிக் கொள்வதற்கு இப்போது இலங்கைக்கு உள்ள ஒரே வழி மீண்டும் கிபீர் விமானங்களுக்கு உயிர்கொடுப்பதாகவே இருக்கக் கூடும்.