இலங்கை சீனாவை நோக்கி செல்வதை அனுமதிக்கக் கூடாது

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கை போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இந்திய இராணுவ தினத்தை முன்னிட்டு டில்லியில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய மண்ணை யாரும் ஆக்கிரமிக்க முடியாது. சீனா வலிமைமிக்க நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா வலுவற்ற நாடு ஒன்றுமில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

சீனாவை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேசத்தின் வடக்கு எல்லை மீது கவனம் செலுத்த வேண்டிய தருணம் வந்துவிட்டது.

இந்திய எல்லையை ஆக்கிரமிக்க சீனா கடும் பிரயத்தனம் மேற்கொண்டுள்ளது. ஆனால், சீனாவின் முயற்சி தொடர்ந்து முறியடிக்கப்படும்.

நமது எல்லையை யாராலும் ஆக்கிரமிக்க முடியாது. சீனாவை எதிர்கொள்ளும் திறன் நமக்கு முழுமையாக இருக்கிறது.

பாகிஸ்தான் எல்லையின் மீதுள்ள கவனத்தை இந்தியா சீனாவின் பக்கமும் திருப்ப வேண்டிய தேவை உள்ளது.

எமது அயல்நாடுகள் சீனாவை நோக்கி நகர்வதை அனுமதிக்கக் கூடாது. அயலவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் கொள்கையை இந்திய அரசாங்கம் காத்திரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

சீனாவைக் கையாள்வதற்கான பரந்துபட்ட மூலோபாயத்தின் ஒரு பகுதியாக, நோபாளம், பூட்டான், மியான்மார், சிறிலங்கா, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளை, இந்தியா தன் பக்கம் தக்கவைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நாடுகளுக்கு தொடர்ந்து ஆதரவளிப்பதற்கு இந்தியா முழுமையான முயற்சிகளை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.