வடக்கில் காணாமல் போன இளம் பெண்கள் வெலிக்கடை சிறையில் தவிப்பு! உறவினர்களுக்கு முக்கிய அறிவிப்பு

Report Print Shalini in பாதுகாப்பு

இறுதி யுத்தத்தின் போது காணாமல் போன பெண்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தாரிடம் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறு காணாமல் போன பெண்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தாரை தனது அமைச்சுடன் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் அவர்களை கண்டுபிடிப்பதற்கும், மீட்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“இரண்டு வருடங்களுக்கு முன்னர், கைதிகளை சந்திக்க நான் வெலிக்கடை சிறைச்சாலைக்கு வந்தபோது, பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஒன்பது பெண்களை சந்தித்தேன். ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய அவர்களது குடும்பங்களை தொடர்பு கொள்ள என்னால் முடியவில்லை. அவர்களின் குடும்பத்தார் குறித்து தகவல்கள் எதும் என்னிடம் இல்லை.

எனினும், காணாமல் போன பெண்கள் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவுவதற்கான ஒரு முயற்சியில் நான் ஈடுபட்டுள்ளேன்.

எனவே, பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தாரை எனது அமைச்சில் பதிவு செய்யுமாறு வேண்டுகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்கள் ஒன்பது பேர் என்பது நம்ப முடியாத ஒன்று. உண்மையில் இன்னும் கூடுதலாக இருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த பல இளம் பெண்களும் இன்னும் திரும்பி வரவில்லை எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், யுத்தத்தின் முடிவில் சிறு காயங்களுடன் இருந்த சில பெண்கள் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட போதும் அவர்களும் ஒருபோதும் திரும்பி வரவில்லை எனவும் குற்றம் சுமத்தினார்.

காணாமல் போன பெண்களைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளார்.

காணாமல் போய் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பெண்களின் குடும்பத்தார் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சுக்கு வர வேண்டும், பதிவு செய்து கொள்ள வேண்டும்.

அவர்கள் எங்கள் அமைச்சகத்துக்கு நேரில் வர வேண்டும் என்ற அவசியமில்லை, ஒரு கடிதத்தையேனும் அனுப்பலாம்” எனவும் வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அறிவித்துள்ளார்.