யாழில் இருந்து வந்த பேருந்தில் உண்மையாக நடந்தது என்ன?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தியத்தலாவ, கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்றினுள் நேற்று இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பான காரணம் வெளியாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொண்டு சென்ற வெடி குண்டு ஒன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இராணுவ வீரர் ஒருவர் தனது காற்சட்டை பையில் மறைத்து வைத்து வைத்திருந்த வெடி குண்டை பையில் இருந்து வெளியே எடுத்து பயணப்பையில் வைப்பதற்கு ஆயத்தமாகியுள்ளார். இதன் போது ஏற்பட்ட சிறிய தவறின் காரணமாக வெடி குண்டு வெடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

பையில் இருந்து வெடி குண்டை வெளியே எடுக்கும் போது, குண்டின் மேற்பரப்பில் இருக்கும் க்ளிப் வெளியேறிய நிலையில் குண்டு கீழே விழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அந்த பேருந்தில் பயணித்த இராணுவ பொலிஸ் அதிகாரி மற்றும் சிவில் பெண் ஒருவர் சம்பவத்தை நேரில் கண்டுள்ளனர்.

இவ்வாறு வெடி குண்டை மாற்றிய இராணுவ வீரருக்கு பாரிய காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அவரது கால்கள் இரண்டு வெட்டி நீக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த வெடி குண்டு யாழ்ப்பாண முகாமில் இராணுவ சிப்பாயினால் திருடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் இராணுவ சிப்பாயிடம் விசாரணைகள் மேற்கொள்ள முயற்சித்த போதிலும் அவர் தீவிர நிலையில் உள்ளமையினால் வாக்குமூலம் பெற்றுக் கொள்ள முடியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

குண்டு வெடிக்கும் போது பேருந்திற்குள் 30 பயணிகள் இருந்துள்ளனர். அவர்களில் 19 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.