கையை மீறிச் செல்லும் விசாரணைகள்!

Report Print Subathra in பாதுகாப்பு
388Shares

இலங்கை இராணுவத்தின் இரண்டு அதிகாரிகள் தொடர்பாக கடந்த வாரத்தில் சர்வதேச அளவில் செய்திகள் வெளியாகியிருந்தன.

இவர்களில் முதலாவது நபர் பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் இருந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ. இரண்டாவது நபர் இலங்கை இராணுவத்தில் சிங்க ரெஜிமன்டைச் சேர்ந்த லெப் வசந்த ஹேவகே.

இவர்களில் முதலாவது நபரான பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ லண்டனில் இருந்து கடந்த வியாழக்கிழமை கொழும்புக்கு அழைக்கப்பட்டார்.

இரண்டாவது நபரான லெப். கேர்ணல் வசந்த ஹேவகே ஐநா அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்குப் பயணம் மேற்கொள்ள இருந்து போது ஐநா அதிகாரிகளால் அவரது பயணம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த இரண்டு விடயங்களிலும் மனித உரிமைகள் தொடரபான கரிசனைகளும் போரின் போதான குறித்த அதிகாரிகளின் தனிப்பட்ட செயல்கள் நடத்தைகளும் பெரும் தாக்கத்தைச் செலுத்தி இருக்கின்றன.

இந்த இரண்டு சம்பவங்களும் வெளித் தோற்றத்தில் சாதாரணமான விடயங்களாகத் தெரியலாம். ஆனால் இந்த விவகாரம் இலங்கை அரசாங்கத்தின் கையை மீறிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதை இந்தச் சம்பவங்கள் உணர்த்தி இருக்கின்றன.

கடந்த 4ம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்த தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவேன் என்பது போல எச்சரிக்கை செய்ததால் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ சர்ச்சையில் சிக்கினார்.

பிரித்தானிய சட்டங்களின் படி அவரது செயல் குற்றமென்று மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் கூறியிருந்தனர்.

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக பிரித்தானிய சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கோரியிருந்தனர்.

அதற்கமைய பிரித்தானியப் பொலிஸார் விசாரணைகளையும் முன்னெடுத்திருந்தனர். அத்தகைய கட்டத்தில் அவரை உடனடியாக பாதுகாப்’பு ஆலோசகர் பணியில் இருந்து வெளிவிவகார அமைச்சு நீக்குவதாக அறிவித்தது.

ஆனால் ஜனாதிபதி மைத்திபால சிறிசேன தலையிட்டு அதனை ரத்துச் செய்தார். தொடர்ந்தும் அவரைப் பணியாற்ற அனுமதித்தார்.

உள்ளூராட்சித் தேர்தல் காலம் என்பதாலும் அவ்வாறு உடனடியாகப் பணியில் இருந்து நீக்கினால் லண்டனில் இராஜதந்திரப் பாதுகாப்பை இழந்து அங்கு விசாரணைகளை எதிர்கொள்ள நேரிடும் என்பதாலுமே ஜனாதிபதி அந்த முடிவை எடுத்ததாகக் கூறப்பட்டது.

எது எவ்வாறாயினும் இப்போது பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ கொழும்புக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு மே மாதமே அவர் லண்டனுக்கு அனுப்பப்பட்டார். சிலர் ஒரு வருடத்துக்கு, சிலர் இரண்டு வருடங்களுக்கு பாதுகாப்பு ஆலோசகர் பதவியில் பணியாற்ற அனுமதிக்கப்படுவது வழக்கம்.

ஆனால் ஒரு வருடம் முடிய முன்னரே பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ திருப்பியழைக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் லண்டனுக்கு அனுப்பப்படுவாரா என்று தெரியவில்லை.

எவ்வாறாயினும் திருப்பியழைக்கப்பட்டதில் பிரித்தானிய அரசின் அழுத்தங்கள் இருந்ததாக தெரிகிறது. இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசுடன் பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்கச் செயலர் மார்க் பீல்ட் பேச்சுக்களை நடத்தியிருக்கிறார்.

அதேவேளை பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ திருப்பி அழைக்கப்பட்டதற்கு இராணுவப் பேச்சாளர் கூறியுள்ள காரணம் நகைப்புக்கிடமானது.

அவர் மீது விசாரணையோ நடவடிக்கையோ எடுக்கப்படமாட்டாது. அவர் குற்றம் ஏதும் செய்யவில்லை. பதவி இறக்கமும் மேற்கொள்ளப்பட மாட்டாது.

என்ன நடந்ததென்’று விசாரித்து அறிந்து கொள்ளவே அவரை இராணுவத்தளபதி அழைத்திருக்கிறார் என்று கூறினார் இராணுவப் பேச்சாளர்.

விபரத்தை அறிந்து கொள்வதற்காக அழைக்கப்பட்டால் மீண்டும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ லண்டனுக்கு அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு அனுப்பப்படாது போனால் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தவறு செய்திருக்கிறார். ஆனால் அரசாங்கத்தினால் காப்பாற்றப்படுகிறார் என்று அர்த்தம்.

இந்த விவகாரம் குறித்து பிரித்தானியப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். எனினும் இராஜதந்திர சிறப்புரிமைகளால் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விசாரணைகளிலிருந்து தப்பியிருக்கிறார்.

இந்த விசாரணைகள் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தொடர்பான முழுமையான தகவல்களையும் பிரித்தானியா ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்கியிருக்கிறது.

அவரது கடந்த காலச் செயற்பாடுகள் போர் நடவடிக்கைகளில் இவரது நடத்தைகள் பற்றிய ஒரு அறிக்கை வெளிநாடு ஒன்றில் பதிவு செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

உடனடியாக இல்லாவிடினும் காலப்போக்கில் இந்த விசாரணையும் அறிக்கையும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கும் இராணுவத்துக்கும் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

இனி இரண்டாவது விவகாரத்துக்கு வருவோம். இந்த விடயத்துடன் தொடர்புடைய லெப்.கேர்ணல் வசந்த ஹேவகே அமைதிப்படையில் பணியாற்றுவதற்காக லெபனானுக்குச் செல்லவிருந்தார். 12வது பாதுகாப்பு கொம்பனியைச் சேர்ந்த 150 படையினருக்கான கட்டளை அதிகாரியாக அவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

லெபனான் புறப்படுவதற்கு தயாராக இருந்து போதே லெப்.கேர்ணல் ஹேவகேயின் மனித உரிமை நடத்தைகள் குறித்து ஆராய வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளால் ஐநா வுக்கு முறைப்பாடுகள் அனுப்பப்பட்டன.

காரணம் இவர் இறுதிக்கட்டப் போரில் முக்கிய பங்காற்றிய ஒரு அதிகாரி. இவர் மேயராகப் பதவியில் இருந்த போது வன்னிப் போரில் பங்கெடுத்திருந்தார்.

2008ம் ஆண்டு கிளிநொச்சியைக் கைப்பற்றுவதற்கான சண்டையில் 57வது டிவிஷனின் கீழ் 4வது சிங்க ரெஜிமென்டின் பதலி கட்டளை அதிகாரியாகப் பணியாற்றியிருந்தார் மெயர் வசந்த ஹேவகே.

அதற்குப் பின்னர் 2009ம் ஆண்டு பெப்ரவரி 20ம் திகதி அவர் 14வது சிங்க ஜெிமென்டின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இந்தப் பற்றாலியன் புதுக்குடியிருப்புச் சண்டையில் தீவிர பங்காற்றியது.

ஏராளமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதான குற்றச்சாட்டுகள் உள்ளன. அவை தொடர்பான எந்த முறையான விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

பொதுமக்களுக்காக அறிவிக்கப்பட்ட பாதுகாப்பு வலயங்களின் மீதான பீரங்கித் தாக்குதல்கள் மருத்துவமனைகள் மீதான தாக்குதல்கள் என்பனவும் இந்தக் குற்றச்சாட்டுகளில் உள்ளடங்கியுள்ளன.

இப்படியான போர்முனையில் பணியாற்றிய லெப்.கேர்ணல் வசந்த ஹேவகே தொடர்பாக முழுமையான ஆய்வை மேற்கொள்ளுமாறு மனித உரிமை அமைப்புகள் கோரியிருந்தன.

அதற்கமைய ஐநா அவரது லெபனான் பயணத்தை தடுத்து நிறுத்தியிருக்கிறது. அவர் தொடர்பான முழுமையான ஆய்வுகளை நடத்தி முடிக்கும் வரையும் ஐநா அமைதிப்படையில் சேர்த்துக் கொள்வதில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக ஐநா பொதுச்செயலரின் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் கடந்த 19ம் திகதி அறிவித்துள்ளார்.

இதனால் கடந்த 18ம்.19ம் திகதிகளில் லெப்.கேர்ணல் ஹேவகே இல்லாமலேயே லெபனானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது இலங்கை இராணுவத்தின் ஒரு குழு.

வெளிநாட்டுப் பயிற்சிகள், ஐநா அமைதிப் படையின் செயற்பாடுகள் கருத்தரங்குகளில் பங்கேற்கும் இலங்கை இராணுவ அதிகாரிகள் பற்றிய முழுமையான மனித உரிமைகள் பற்றிய ஆய்வுகள் கொள்ளப்பட வேண்டும் என்பது ஐநா மனித உரிமைகள் ஆஐணயாளர் பணியகத்தின் முக்கியமான பரிந்துரையாகும்.

இந்த வியடத்தில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகமும் இலங்கை அரசாங்கமும் இணைந்து செயற்பட்டு வருகின்றன.

மூன்று அடுக்கு மனித உரிமை ஆய்வுகளுக்குப் பின்னரே இராணுவ அதிகாரிகள், ஐநா பணிகளுக்கு அனுப்பப்படுவதாக அரசாங்கம் கூறியிருந்தது.

ஆனாலும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விவகாரத்திலும் சரி லெப்.கேர்ணல் வசந்த ஹேவகே ஐநா அமைதிப் படைக்கு தெரிவு செய்யப்பட்ட விவகாரத்திலும் சரி அந்த மனித உரிமை ஆய்வுச் செயன்முறைகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை என்பதையே உறுதி செய்திருக்கின்றன.

இந்த விடயத்தில் மாத்திரமல்ல இதற்கு முன்னர் லெபனானில் ஐநா அமைதிப்படைக்காக அனுப்பப்பட்ட இலங்கை இராணுவத்தின் கொம்பனிகளுக்கு கட்டளை அதிகாரிகளாக அனுப்பப்பட்ட லெப்.கேர்ணல் சி.ஏ.ராஜபக்ச, லெப்.கேர்ணல் தினேஸ் உடுகம, லெப்.கேர்ணல் கொடித்துவக்கு ஆகியோரும் கூட இறுதிக்கட்டப் போரில் தீவிர பங்காற்றியவர்கள் தான்.

இறுதிப் போரில் தாக்குதல்களில் ஈடுபட்ட முன்னணி காலாட்படைப் பிரிவுகளுக்காக இருந்த கெமுனு வோச் 3வது கஜபா ரெஜிமென்ட், 6வது விஜயபா ரெஜிமென்ட் ஆகியவற்றின் கட்டளை அதிகாரிகளாக இவர்கள் பணியாற்றியவர்கள்.

இவர்கள் இந்தப் பணிகளுக்கு தெரிவு செய்யப்பட்ட போது கூட ஐநா அவர்களின் மனித உரிமை பதிவுகளை ஆய்வு செய்யவில்லை. இப்போது லெப்.கேர்ணல் வசந்த ஹேவகே பயணத்தை ஆரம்பிக்குமளவுக்கு முன்னேறும் வரை ஐநா அவரது மனித உரிமை பதிவுகளைக் கண்டுகொள்ளவில்லை.

இவர்கள் போரில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனரா இல்லையா? என்பதல்ல பிரச்சினை. அத்தகைய மீறல்களில் தொடர்புபடாதவர்கள் என்ற உத்தரவாதத்தை பெறும் செயல்முறைகள் பின்பற்றப்படவில்லை என்பதே இங்குள்ள பிரச்சினை.

படையினரின் மனித உரிமை பதிவுகள் முறையாக மீளாய்வு செய்யப்பட வேண்டும் என்ற பரிந்துரையை ஐநா தான் முன்வைத்தது. அதே ஐநா அமைப்புகள் தான் அந்தப் பரிந்துரையையும் காற்றில் பறக்க விடுகின்றது.

எவ்வாறாயினும் இப்போது மனித உரிமை அமைப்புகளின் அழுத்தங்களால் இந்த விவகாரம் ஐநா வினால் ஆய்வு செய்யப்படும் நிலை ஏற்பட்டுளது.

தெரிந்தோ தெரியாமலோ இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர் தொடர்பாக ஐநாவும் விசாரணைகளை முன்னெடுக்கின்ற நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின் பதிவுகள் யாருக்குச் சாதகமாக வந்தாலும் ஐநா விலும் இலங்கை இராணுவ அதிகாரிகள் பற்றிய விசாரணைப் பதிவுகள் திறக்கப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தும்.

இலங்கை இராணுவத்தினர் வெளிநாடுகளில் விசாரணைகளை எதிர்கொள்ளும் நிலையை அனுமதிக்க மாட்டோம் என்று வாக்குறுதி கொடுத்த மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தின் காலத்தில் தான் இந்த விசாரணைகள் நடக்கின்றன.

இலங்கை அரசாங்கம் மனித உரிமை மீறல்களை மறைத்துக் கொண்டு நழுவ முனைவதன் விளைவே இது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கவும் அவற்றுக்குப் பதிலளிக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியொரு நிலைக்கு வந்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்ஹகாது.