அம்பாறையில் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் மரணம்

Report Print Aasim in பாதுகாப்பு
101Shares

அம்பாறை மத்திய முகாம் பிரதேசத்தில் இன்று நண்பகல் மின்னல் தாக்கி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்தியமுகாம் பொலிஸ் பிரிவிலுள்ள சடயந்தலாவ பிரதேசத்தில் இன்று நண்பகல் குறித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

மின்னல் தாக்குதல் காரணமாக ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், மற்றொரு இளைஞர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு மரணமடைந்தவர் நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய எம்.ஐ.தாஹிர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மஜீட்புரத்தை சேர்ந்த எஸ்.எல்.இம்ஜாட் (வயது – 28) என்பவரே படுகாயமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. .

சடயந்தலாவ வயல் பிரதேசத்திற்கு மேய்ச்சலுக்காக சென்ற கால்நடைகளை பார்த்துவிட்டு வயல்வெளியின் மத்தியில் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த நிலையில் மின்னல் தாக்கியுள்ளதாக பொலிசாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மின்னல் தாக்குதலின் போது தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அவருக்கு அருகில் நின்றவர் ஆபத்தான நிலையில் கல்முனை அஷ்ரப் ஞாபகர்த்த வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.