சிதறும் சிரியா... கதறும் மக்கள்!- போர் பின்னணி என்ன?

Report Print Samy in பாதுகாப்பு
735Shares

மத்திய கிழக்கில் உள்ள சிரியா, கடந்த எட்டு ஆண்டுகளாக சிரிப்பை மறந்து, மரண வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது.

2011ல் தொடங்கிய உள்நாட்டு போரில் ஏற்கனவே 4 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். இருப்பினும் போர் ஓய்ந்த பாடில்லை.

தற்போது சிரியா தலைநகர் டமாஸ்கஸ்க்கு அருகே உள்ள கிழக்கு கவுட்டா பகுதியில் அரச படைக்கும் - போராட்டக் குழுவினருக்கும் இடையே போர் தீவிரமாக நடக்கிறது.

கடந்த ஒரு வாரத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என செய்திகள் வருகின்றன.

30 நாட்கள் சண்டை நிறுத்தத்துக்கு ஐ.நா., அழைப்பு விடுத்தும், போர் தொடர்கிறது.

சொந்த மக்களை பலியாக்கி, ஆட்சியாளர்களும், போராட்ட குழுக்களும் எதை சாதிக்கப் போகின்றனர் என தெரியவில்லை.

கடந்த 1961 வரை எகிப்தின் ஒரு பகுதியாகவே சிரியா இருந்தது. 1961 செப்., 28ல் தனிநாடாக மலர்ந்தது. இங்கு ஒரு கட்சி, ஒரு ஆட்சி முறை பின்பற்றப்படுகிறது.

1970 முதல் 2000 வரை ஹபிஸ் அல் ஆசாத் என்பவர் ஆட்சி செய்தார். சிரிய மக்கள் தொகையில் 90 சதவீதம் பேர் முஸ்லிம்கள். இதில் 15 சதவீதம் ஷியா பிரிவினர். 75 சதவீதம் சன்னி பிரிவினர்.

ஆனால் ஷியா பிரிவைச் சேர்ந்த ஆசாத் அரசின் முக்கிய நடவடிக்கை எடுக்கும் பொறுப்புகளில், சன்னி பிரிவினருக்கும் இடம்கொடுத்தார்.

ஹபிஸ் அல் ஆசாத் மறைவுக்குப் பின், இவரது மகன் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு வந்தார். சன்னி பிரிவினருக்கான முக்கியத்துவம் குறைக்கப்பட்டது. இது அப்பிரிவு மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியது.

மேலும் இவரது ஆட்சியில் வேலை வாய்ப்பு , மருத்துவ வசதி இல்லை. உணவுப் பற்றாக்குறையும் ஏற்பட்டது. இதையடுத்து ஜனநாயகத்தை விரும்பிய சில போராட்ட குழுக்கள் புரட்சியில் குதித்தன.

மேலும் 2011 காலகட்டத்தில் எகிப்து, லிபியா, ஜோர்டான், சூடான், துனிஷியா போன்ற அண்டை நாடுகளிலும் மக்கள் புரட்சி வெடித்துக் கொண்டிருந்தது.

மக்கள் புரட்சியால் துனிஷியாவில் ஆட்சி மாற்றமே வந்தது. துனிஷியாவின் நிலை தான் நமக்கும் என்று மக்கள் மீது பஷர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தத் தொடங்கினார்.

மக்களும் அதிபருக்கு எதிராகப் போராடத் தொடங்கினர். இதன் விளைவாக 2011ல் உள்நாட்டு போர் தொடங்கியது.

கடந்த 2011ல் அதிபருக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து 15 மாணவர்கள் சுவரில், வாசகம் எழுதினர். இதனால் அம்மாணவர்களை இராணுவம் சித்திரவதை செய்தது.

இதில் 13 வயது மாணவன் கொல்லப்பட்டான். இதுதான் சிரியா போருக்கான தீ்ப் பொறி.

சிரிய உள்நாட்டு போருக்கு சர்வதேச சதியும் காரணமாக கூறப்படுகிறது. ரஷ்யாவின் கீழ் இருக்கும் சிரியாவில், அமெரிக்காவின் ஆதிக்கம் வரக்கூடாது என்பதற்காக ரஷ்யா ஆளும் அதிபருக்கு ஆதரவு அளிக்கிறது.

எண்ணெய் வளத்தை கருத்தில் கொண்டு அமெரிக்காவும், போராட்ட குழுக்களுக்கு உதவுகிறது. இஸ்ரேலும், துருக்கி, சவுதி உள்ளிட்ட 34 நாடுகள் போரில் மறைமுகமாக பங்கேற்றுள்ளது என கூறப்படுகிறது.

70 லட்சம் பேர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.24 லட்சம் மாணவர்கள் பள்ளி படிப்பு பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது. 14 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

- Dina Malar