கண்டி வன்முறையில் உயிரிழந்த இரு இளைஞர்கள் - இராணுவ சிப்பாய் மீது சந்தேகம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

கண்டியில் இடம்பெற்ற வன்முறை சம்பவத்தின் போது கைக்குண்டு வெடித்து 29 வயதுடைய இளைஞர் உயிரிழந்தார்.

இது தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் விசேட விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

மலை பிரதேசம் ஒன்றிக்கு அருகில் இந்த குண்டு வெடித்துள்ளதாக பொலிஸ் தலைமையக பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர் மலையின் கீழ் பகுதியில் இருந்தார் எனவும், மலைக்கு மேல் இருந்த நபர் வெடி குண்டை வெடிக்க செய்திருக்கலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது கண்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த சந்தேக நபர் 2014ஆம் ஆண்டு இராணுவத்திற்கு தொடர்புபட்டிருந்ததாகவும், 2015ஆம் ஆண்டு அவர் இராணுவத்தை விட்டு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 2017ஆம் ஆண்டு இராணுவத்தில் இருந்து உத்தியோகபூர்வமாக விலகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை, தெல்தெனிய பிரதேசத்தில் ஏற்பட்ட வன்முறையின் போது விஷ வாயு சுவாசித்தமையினால் உயிரிழந்த முஸ்லிம் இளைஞனின் மரணம் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கென்கல்ல பிரதேசத்தில் மசூதிக்கு தாக்கப்பட்ட சம்பவத்தின் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளும் பொலிஸாருக்கு கிடைத்துள்ள நிலையில் அந்த சம்பவம் தொடர்பிலும் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.