சமூக வலைத்தளங்களை தடை செய்யும் தேவை இல்லை - பிரதமர்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

சமூக வலைத்தளங்களை தடை செய்யும் தேவை எவருக்கும் இல்லை எனவும் அடுத்த வாரம் அதனை கட்டுப்படுத்த சட்டம் உருவாக்கப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு இசிப்பதனை கல்லூரியில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

முதலில் நானே இணையத்தளத்தை அறிமுகப்படுத்தினேன். 1993 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது அமெரிக்காவுக்கு சென்று அந்நாட்டு உப ஜனாதிபதி எல்கோவுடன் இது தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திட்டேன்.

உலகத்துடன் இணைய வேண்டும் என்பதால், நாங்கள் இணையத்தளத்தை இலங்கையில் அறிமுகப்படுத்தினோம்.

பேஷ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் பகையை ஏற்படுத்தும் செய்திகள், இனவாதம், இனவாத மோதல்களை அதிகரிக்கும் செய்திகள் வெளியிடப்படுகின்றன. ஒரு அணி இப்படியான செய்திகளை வெளியிடும், மறுபுறம் பதில்கள் அதிகளவில் வருகின்றன.

கடந்த வாரம் திங்கட்கிழமை தெல்தெனிய, திகண ஆகிய பிரதேசங்களில் வன்செயல்கள் நடந்தன. சாதாரணமாக வன்செயல்கள் நடந்தால், முதல் நாளின் பின்னர் அதனை கட்டுப்படுத்த முடியும்.

எனினும் அன்றைய தினம் காலையிலேயே அதனை கட்டுப்படுத்தினோம். மாலையில் மீண்டும் வன்முறைகள் ஏற்பட்டன.

அமைச்சரவையில் இது குறித்து கலந்துரையாடிய போது புதிய சவாலை எதிர்நோக்கியுள்ளதாக பொலிஸார் அறிவித்தனர்.

பேஷ்புக் மூலமாக அனுப்பி வைக்கப்படும் பகையுணர்வுடன் கூடிய செய்திகள் சமூகத்தில் தீயை மூட்டுவதாக அவர்கள் கூறினர். அம்பாறையில் இந்த நிலைமையை காண முடிந்தது.

பௌத்த பிக்கு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், பௌத்த விகாரைகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகவும் பொய்யான செய்திகளை பரப்பினர். இதனால் மக்கள் குழப்பமடைந்து பதற்றம் ஏற்பட்டது.

இதனால், குறுகிய காலத்திற்கு சமூக வலைத்தளங்களை முடக்க வேண்டும் என பாதுகாப்பு தரப்பினர் யோசனை முன்வைத்தனர். அதற்கான அனுமதி கிடைத்த பின்னர் செவ்வாய்க்கிழமை மாலை சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன.

புதன்கிழமை காலைக்குள் பதற்றத்தை கட்டுப்படுத்த முடிந்தது என பாதுகாப்பு தரப்பினர் எமக்கு அறிவித்தனர் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்