யாழ். வலிகாமம் வடக்கு மக்களுக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை

Report Print Suthanthiran Suthanthiran in பாதுகாப்பு

யாழ். வலிகாமம் வடக்கில் கடந்த 13ஆம் திகதி 683 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக வழங்கப்பட்டிருக்கும் நிலையில், மேற்படி பகுதியில் 3 படைமுகாம்கள் அகற்றப்படாமல் இருப்பதாக மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனால் பூரணமாக மீள்குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளதாகவும், 2 வீதிகளை பூரணமாக பயன்படுத்த அனுமதிக்காமல் இராணுவம் தடை செய்திருப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

28 வருடங்களாக வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த 683 ஏக்கர் நிலம் கடந்த 13ஆம் திகதி மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் மீள வழங்கப்பட்டுள்ளது.

ஜே.240, ஜே.246, ஜே.2 47 ஆகிய கிராமசேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாகவே 683 ஏக்கர் நிலம் மக்களிடம் மீள வழங்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டாலும் மேற்படி கிராமசேவகர் பிரிவுகள் பூரணமாக விடுவிக்கப்படவில்லை.

இதற்குள் படையினரின் 3 பாரிய முகாம்கள் காணப்படுகின்றன. படையினரின் முகாம்கள் அமைந்துள்ள நிலங்களுக்கு சொந்தமான மக்கள் மீள்குடியேற முடியாத பரிதாப நிலையில் உள்ளனர். இதனால் அவர்கள் தொடர்ந்தும் உறவினர், நண்பர்கள் வீடுகளிலும், நலன்புரி நிலையங்களிலும் வாழ்ந்து வருகின்றனர்.

எனவே மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்க ப்பட்டள்ள ஜே.240, ஜே.246, ஜே.247 கிராமசேவகர் பிரிவுகளில் பூரணமாக மக்களை மீள்குடியேற்ற இராணுவம் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு, யாழ். மாவட்ட செயலகம் ஆகியன நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கேட்டுள்ளனர்.

மேலும் விடுவிக்கப்பட்டுள்ள பகுதியில் உள்ள கட்டுவன் - மயிலிட்டி வீதியில் ஒரு பகுதி மற்றும் மாவிட்டபுரம் - வயாவிளான் வீதியில் ஒரு பகுதி ஆகியவற்றை இராணுவம் தொடர்ந்தும் தமது பயன்பாட்டில் வைத்துள்ளது.

இந்த பகுதியை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு அவர்கள் தடை விதித்திருக்கின்றனர். இதனால் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை ஊடறுத்து மாற்று பாதையை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.

இதனால் மாற்று பாதையாக பயன்படுத்தப்படும் காணிகளக்கு சொந்தமான மக்கள் மீள்குடியேற முடியாத நிலை உருவாகியுள்ளது. அதனை மீறி அந்த காணிகளுக்கு சொந்தமான மக்கள் மீள்குடியேறினால் மாற்று பாதை இல்லாத நிலையில் மேற்படி வீதிகளை பயன்படுத்தவே முடியாத நிலைவரும் என மக்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பாக வலிகாமம் வடக்கு பிரதேச சபை தலைவர் எஸ்.சுகிர்தன் தகவல் தருகையில்,

மீள்குடியேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட பகுதியில் 3 பாரிய படைமுகாம்கள் காணப்படுகின்றன. மேலும் 2 வீதிகள் தொடர்ந்தும் படையினரின் பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கின்றது. இவற்றை விரைவாக மக்களிடம் மீள வழங்கினாலேயே பூரணமான மீள்குடியேற்றம் சாத்தியமாகும்.

எனவே அந்த காணிகளையும், வீதிகளையும் விரைந்து விடுவிப்பதற் கு இராணுவம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கூறியுள்ளார்.