இலங்கையிலுள்ள ஒரேயொரு மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்

Report Print V.T.Sahadevarajah in பாதுகாப்பு
1257Shares

நிந்தவூர் - மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயம் நேற்று நள்ளிரவு விசமிகளால் உடைக்கப்பட்டுள்ளது.

ஆலய முன் கதவிலுள்ள இரும்புப்பட்டத்தினுள் 5 பூட்டுக்கள் உடைக்கப்பட்டு வீசப்பட்டுள்ளதுடன் பட்டமும் சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஆலய நிர்வாகம் சம்மாந்துறை பொலிஸில் முறைப்பாடு செய்தமையை அடுத்து பொலிஸார் ஸ்தலத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சோழர் காலத்து ஆலயமான இந்த மீனாட்சி அம்மன் ஆலயம் இதற்கு முன்னரும் ஒரு தடவை உடைக்கப்பட்டிருந்தது. அத்துடன், இலங்கையிலுள்ள ஒரேயொரு மீனாட்சி அம்மன் ஆலயம் இது என்பது சிறப்புக்குரிய விடயமாகும்.

இது தொடர்பில் நேற்றிரவு ஆலய பாதுகாப்பு கடமையிலிருந்த காவலாளி யோகராசா தெரிவிக்கையில்,

இரவு 12 மணியளவில் நாய்கள் குரைக்கும் சத்தம் கேட்டு கண்விழித்தேன். உடனே எழுந்து பார்த்த போது அங்கு பழைய ஆலயமருகே நான்கு இளம் நபர்கள் போதையுடன் கைகளில் வாள்களுடன் நிற்கக்கண்டேன்.

பின்பு ஆலய கதவு பூட்டு உடைக்கப்பட்டு வீசப்பட்டிருந்தன. 5 பூட்டுக்கள் உடைக்கப்பட்டிருந்தன. 4 பூட்டுக்கள் அதே இடத்தில் கிடந்தன. ஒரு பூட்டு தூர வீசப்பட்டிருந்தது என்றார்.

இந்த சம்பவம் குறித்து ஆலய முன்னாள் உபதலைவரும் காரைதீவு பிரதேசசபை தவிசாளருமான கே.ஜெயசிறில் அங்கு கூறுகையில்,

இது ஒட்டுமொத்த இந்துக்களை புண்படுத்தியுள்ளது. பொருளாதாரம் வளம் மிகக்குறைவான நிலையிலுள்ள இந்த ஆலயம் மக்களின் ஒத்துழைப்பால் அருகில் புதிய ஆலயம் அமைக்கப்பட்டு விரைவில் கும்பாபிசேகம் காணவிருக்கின்ற இந்த வேளையில் இந்த துர்ச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் ஆலய உடைப்பென்பது புதிய விடயமல்ல. ஆலயம் உடைக்கப்படுவது தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது. அதற்கான கடுமையான தண்டனை வழங்கப்படாமையும் குறித்த நபர்களை கைது செய்யாமையுமே இதற்கு காரணமாகும் என குறிப்பிட்டார்.